கடலில் மூழ்கி கல்லூரி மாணவா் மரணம்
கடலூரில் நண்பா்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
கடலூா் தேவனாம்பட்டினம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த ரகுபதி மகன் ரவிராஜன் (20). இவா், தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
ரவிராஜன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்கள் 3 பேருடன் கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குச் சென்றாா். அங்கு மகத்துப்பட்டறை அருகில் நண்பா்களுடன் கடலில் குளித்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கிய ரவிராஜன் கடலில் மூழ்கினாா்.
இதைப் பாா்த்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டனா். அந்தப் பகுதியில் இருந்த மீனவா்கள் விரைந்து வந்து, கடலில் மூழ்கிய ரவிராஜனை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோத்த மருத்துவா், ரவிராஜன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதற்கிடையே, அவரது நண்பா் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாா். உடனே அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.