2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
கடலூர்: மூன்று முறை கருக்கலைப்பு… ஆபாசமாகப் பேசி, காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த விசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். 32 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற இளம்பெண்னை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததுடன், வெளியூருக்கும் சென்று வந்திருக்கின்றனர். இந்த நிலையில் சாந்தி கர்ப்பமாகியிருக்கிறார். அது குறித்து செல்வகுமாரிடம் கூறிய சாந்தி, விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு செல்வகுமார் சாந்தியை சந்திப்பதை தவிர்த்ததுடன், அவருடன் பேசுவதையும் நிறுத்தியிருக்கிறார்.

அதனால் நேற்று 6-ம் தேதி தன்னுடைய பெற்றோரை அழைத்துக் கொண்டு செல்வகுமாரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போது சாந்தியை ஆபாசமாகப் பேசிய செல்வகுமார், திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். அதையடுத்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார் சாந்தி. அந்தப் புகாரில், ``நானும், செல்வகுமாரும் ரெண்டு வருஷமா காதலிக்கறோம். உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அவரு சொன்னதால, நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி தனியா சந்திக்க ஆரம்பிச்சோம். முதல் முறை நான் கர்ப்பமானதும், இப்போ சரியான வேலை இல்லை.
அதனால வேலை கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லி, கருக்கலைப்புக்கு மாத்திரை கொடுத்தாரு. நானும் அவர் சொன்னத நம்பி கருக்கலைப்பு பண்ணேன். அதுக்கப்புறம் அதேபோல ரெண்டு முறை கர்ப்பமானேன். அப்போவும் மாத்திரை வாங்கிக் கொடுத்து கருவை கலைக்க சொன்னாரு. என்ன பண்றதுனு தெரியாம நானும் கருவை கலைச்சேன். அதுக்கப்புறம் வேலையை பத்தியோ, கல்யாணத்த பத்தியோ பேச மாட்டாரு. ஆனால் என்னை மட்டும் அடிக்கடி தனியா கூப்பிட்டுக்கிட்டே இருப்பாரு. இப்போ நான்காவது முறையா கர்ப்பமானதை சொன்னதும், மறுபடியும் கருக்கலைப்புக்கு மாத்திரை வாங்கிக் கொடுத்தாரு.

ஆனால் இந்தமுறை கருக்கலைப்பு செய்றதுக்கு எனக்கு மனசு வரல. அதனால கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன். ஆனால் அதுக்கு அவர் ஒத்துக்கல. அதுமட்டும் இல்லாமல் அவரோட அப்பா ஜெயராமன், அம்மா ராஜேஸ்வரி, அண்ணன் கலைச்செல்வன் எல்லோரும் என்னை ஆபாசமா திட்டுனாங்க. என்னை கொலை பண்ணிடுவேன்னு மிரட்டினாங்க” என்று கூறியிருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் செல்வகுமார் மற்றும் அவரது அப்பா, அம்மா, அண்ணன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த பண்ருட்டி போலீஸார், செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.