செய்திகள் :

கடல் தாண்டிய சொற்கள்: `போரின் வலிதாங்கிய மனதின் குரல்' - கமலா விஜேரத்ன கவிதைகள்

post image

சொல்வதற்கும் செய்வதற்கும் எவ்வளவோ இருந்தாலும் ஒரு பெண் போரின் வலிகளைப் பற்றி எழுதுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? ஏன் இவ்வளவு சிரமப்பட்டு உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்? ஏன் அதை விவரித்து எழுதவேண்டும்?   கவிதையாக மாறும் தருணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு முன்னால் ஓங்கி நிற்பது ஓயாமல் ஒலிக்கும் அகத்தின் குரலும் அதன் விசும்பலுமே என்று நினைக்கிறேன்.

நான் எழுதுகிறேன், ஏனெனில்

என்னுள் ஒரு குரலிருக்கிறது

அது நின்று விடாது

சில்வியா பிளாத்

 என்னுடைய உள்ளார்ந்த குரல்தான் எழுதத் தூண்டுகிறது என்கிறார் சில்வியா பிளாத். தன்மையத்தில் அமைதியாய் எழுதப்படும் கவிதைகள் உள்ளேயும் வெளியேயும் நிகழ்த்தும் மாயங்கள் மொழியின் வழியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. நம்முள் இருக்கும் குரல் அமைதியாகவோ சத்தமாகவோ துடித்துக்கொண்டேதான் இருக்கிறது.

அதற்குள் முயங்கியிருக்கும் உள்ளார்ந்த எண்ணங்கள் சொற்களை உந்தித் தள்ள மகிழ்ச்சிகளும், வலிகளும் துயரங்களும் வார்த்தைகளாகி வரிகளாகின்றன. உணர்வுகளோடும் உண்மைகளோடும் பிணைந்து நிற்கும் கவிதைகள் தன்னிச்சையாக வெளிப்படும்போது ஆழ்மனம் விழித்துக்கொள்கிறது.

போரும் போர் சார்ந்த கருப்பொருள்களையும் அடிப்படையாகக் கொண்ட எழுத்துகளை முன்வைத்த இலங்கையைச் சேர்ந்த படைப்பாளர் கமலா விஜேரத்ன. போரைப் பற்றி அதிகமாக எழுதிய முக்கியமான பெண் படைப்பாளி. இலங்கையில் நடந்த போர் பற்றிய நினைவுகளைத் தன்னுள் புதைத்துக் கொண்ட கமலா விஜேரத்ன அதில் உருகி, சொற்களைக் குறியீடுகளாக்கிக் கவிதைகளாக்குகிறார். சிங்களக் கவிஞரான இவர் தமிழ் ஈழப் போராளிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்குமிடையே கிட்டத்தட்ட இருபத்தியாறு ஆண்டுகளாக நடைபெற்ற ஈழப்போரின் துயரங்களின் உள் நோக்கிய நகர்வுகளை வார்த்தெடுத்துள்ளார்.

கமலா விஜேரத்ன
கமலா விஜேரத்ன

போர் ஏற்படுத்திய துன்பங்களை மனப்பதிவுகளாக்கி வெளிவந்த பல்வேறு கவிதைகளோடு வீரர்களின் குடும்பத்துப் பெண்கள் படும் சிரமங்களையும் அதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய நுண்ணியமான புரிதலையும் பதிவு செய்துள்ளார். போருக்கும் பெண்களுக்குமான இடைவெளி மேலோட்டாமாகப் பார்க்கப்பட்டாலும் அதிகமாக மனத்தளவில் பாதிக்கப்படுவதுடன் எப்போதும் பதட்டத்துடன் இருப்பது பெண்களாகவே இருக்கின்றார்கள்.

ஒரு சிங்கள சிப்பாயின் மனைவி அழுகிறாள். அழுதுகொண்டே இருக்கிறாள். கல்லறைப் பாடல்கள் உளவியல் ரீதியாக அதீத மனஉளைச்சலைத் தருபவையாக இருக்கின்றன. கணவர்கள் வீரர்களாக இருக்கும் வீட்டில் பெண்களின் பங்கு, போரில் பலியாகின்ற ஆண்களின் வீட்டுப் பெண்கள், கணவன் போருக்குச் சென்றபிறகு அவனை நினைத்தும் அதற்காகப் பெருமைப்படும் பெண்களென வீரர்களின் வாழ்வில் நிரந்தரமின்மையும், கணவன் போருக்குச் சென்ற பின், பெண்கள் வீட்டிலேயே பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதுமாக உண்மையான நிகழ்வுகளை நேரில் பார்த்து அவற்றை நினைவுக் கூர்ந்து அவற்றை  எழுத்தில் கொண்டுவந்தார்.

கமலா விஜேரத்ன சமூக, அரசியல், உடல், உளவியல், துயரங்களின் மௌனக் குரலுடன் ஏக்கங்களை எழுதிச்செல்லும் படைப்பாளராக உணர்வுகளைத் தடவிச்செல்கிறார். இலங்கை இலக்கியத்திற்கு ஆங்கிலத்தில் முக்கியப் பங்களித்த இவர் கண்டி பகுதியில் உவப்பனேவில் பிறந்தவர். குடும்பத்திற்கு மூத்த மகள், இவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். கொழும்பு பல்கலையில் ஆங்கில இலக்கியம் பயின்று முதுகலையில் தேர்ச்சி பெற்று ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். இலங்கை இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்குக் கொடுக்கப்படும் உயரிய கௌரவமான சாகித்ய ரத்னா விருதினைப் பெற்றவர்.

கமலா விஜேரத்ன
கமலா விஜேரத்ன

சமீபத்தில் வெளியிட்ட மௌனத்தில் எழுதப்பட்ட கவிதைகள் கொவிட் காலக்கட்டத்தில் சமூகத் தொடர்பு இல்லாமல் வாழ்வது குறித்துத் தனிமையிலும் மௌனத்திலும் மனநிறைவை அடைவதற்கான வழிகளைக் காண்பதுமாக அடுத்த நிலைக்குச் சென்றன. அமைதியிலிருந்து வலிமையையும் பொருளையும் உருவாக்க முடியுமென்ற பாடுபொருள்களில் அமைந்த கவிதைகள். வீட்டில் அடைபட்டுக்கிடந்த கொவிட் துன்பங்களையும் அத்தகைய விரும்பத்தகாதச் சூழ்நிலை ஏற்படுத்தும் சலிப்பும் அதன் பிரதிபலிப்புமாக, அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதையும் விளங்க வைத்திருக்கிறது. எந்தக் கவலையும் இல்லாத உலகில், மனிதனின் மனிதாபிமானமற்ற தன்மையின் விளைவுதான் இந்த வைரஸ் என்று கமலா கூறுவது நியாயம்தானே.

ஆத்திரத்துடன், விரக்தியுடன், நகைச்சுவையுடன், மனிதநேயத்தைத் தனது தொகுப்பில் திரியவைத்திருக்கிறார். சமகாலப் பிரச்சினைகள் மற்றும் மனித உறவுகள் மீறி உளவியல் ரீதியாக நுட்பமான கருத்தியல் நிறைந்தது. இதயத்தை நொறுக்கும் அவதானிப்புகள் சோகத்தையும் வலியையும் நிரப்பிக்கொண்டு, கருணையோடு தோள்களை அரவணைத்துச் செல்கின்றன. அப்படியான கவிதைகள் தீவிரமாகவும் அதி நுட்பமான உணர்வுகளுடன் இருக்கின்றன.

கமலா விஜேரத்ன
கமலா விஜேரத்ன

பாட்டியின் தோட்டத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பல்புகளைக் கொண்டு வந்த பிறகு, அவளுடைய தோட்டத்தில் பூக்கும் 'ஹவ்கெண்டா' பற்றியது ஒரு கவிதை . சுனாமி, பெண்களுக்கான பாடல்கள், இரண்டு மரங்கள் அருகருகே வளர்வதைப் பற்றிய எளிய கவிதைகளும் உள்ளன. இளம் நெல்லிக்காய் மரமொன்று ஒளிரும் சூரிய ஒளியில் தன்னைத்தானே வெப்பமாக்கிக்கொண்டு பழைய மரம் நிலைத்து நிற்கிறது என்கிறார். இது நெல்லிக்காய் மரத்திற்கானது மட்டுமல்ல.

கமல விஜேரத்ன, ஆசிரியராக இருந்தாலும் சமூக, அரசியல் சார்ந்தும் உடல், உளவியல் சார்ந்தும், மனிதத் துன்பங்களின் மௌனக் குரல். ஏக்கமும் சிடுமூஞ்சித்தனமான நினைவுகளையும் கொண்ட கமலா விஜேரத்ன, வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் பார்வைகள் வளம்பெற்றன. கூர்ந்து கவனிக்கப்பட்டு இதயத்தை உடைக்கும் வகையில், விஜேரத்னவின் அவதானிப்புகள் அசைக்கின்றன. அமைதியான ஆத்திரத்துடன், விரக்தியுடன், நகைச்சுவையையும் மனிதநேயத்தையும் சேர்த்தே தனது தொகுப்பில் பதிந்துள்ளார்.

கமலா விஜேரத்ன
கமலா விஜேரத்ன

"இசைகள்" என்ற கவிதை, போர் காரணமாக ஏற்பட்ட துயரத்தையும், போருக்கு அனுப்பப்படுகின்ற துடிப்பான இளைஞர்கள் பின் விளைவுகளை அறிந்தும் அசாத்திய தைரியத்துடன் மகிழ்ச்சியுடன் தெருவில் பாடல்களை இசைத்தபடி ஊர்வலமாகச் செல்கின்றனர்.

இசைகள்

இளையர் படைகள்

மிகவும் புத்திசாலித்தனமாகத் தெரிகின்றன

பச்சை-பழுப்பு நிறச் சீருடையில்

மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்

கைகளால் முரசடித்து

பாடல்களைப் பாடுகிறார்கள்

தாளத்தில் தங்கள் காலணிகளை அடிக்கிறார்கள்

வண்டி வடக்கு நோக்கி நகர்கிறது

அவர்களது இளமையா

என் கண்களில் ஈரத்தை வரவழைத்தது?

நிற்காமல் கேட்டுக்கொண்டிருக்கும் மெல்லிசையா

என்னைச் சங்கடப்படுத்துகிறது?

இசைகள்|Representation Image
இசைகள்|Representation Image

அக்காட்சி இன்னும் மறையவில்லை

என் முன்னே காட்சியாக இன்னும் விரிகிறது

நீண்ட கால்வாயைக் கடந்து செல்லும்போது

இசை மங்குகிறது

ஒரு நாள் செல்லப் பிராணிகளுக்கான கடையில்

கூண்டில் அடைக்கப்பட்ட

கிளிகளின் நீள் வரிசையைப் பார்த்தேன்

அவற்றின் இறகுகளிலிருந்த பசுமை நிறம்

மங்கிக் கொண்டிருந்தது

அவற்றின் நாட்கள் எண்ணப்படுகின்றன

என்பது தெரிந்தது

அவற்றை வாங்க விரும்பினேன்

அவை பறந்து செல்லட்டும்

நாள் முழுவதும் பாடுவதற்காகப்

பசுமையான மரத்திற்குத் திரும்பட்டும்

வண்டி வடக்கு நோக்கிச் செல்கிறது

கண்களின் மேலிருக்கும்

இமைகளை அழுந்த மூடினேன்

தெய்வங்கள் உங்களைக் காக்கட்டுமென நினைத்தேன்

மேலும், நீங்கள் சந்திக்கவிருப்பவர்கள்

புத்திசாலிகளாக இருக்கிறார்கள்

இளையர்கள் தங்களது துருப்புகளுடன்

பச்சை-பழுப்பு நிறச் சீருடையில்

மகிழ்ச்சியாகத் தெரிகிறார்கள்

அவர்கள் கைகளால் தாளங்களை இசைத்தபடி

தங்களது பாடல்களைப் பாடுகிறார்கள்

அவர்களின் குரல்கள் தெருவில் கரைகின்றன

வண்டிகள் வடக்கு நோக்கி வளைகின்றன

நான் சிறுமியாக இருந்தபோது ராணுவத்தில் இணைந்த வீரர்களை இப்படியாகப் பேண்ட் வாத்தியங்களுடன் தெருவில் அணிவகுத்து நடந்து அழைத்துச்செல்வதைப் பார்த்திருக்கிறேன்.  இப்போதெல்லாம் அப்படியொரு வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.  இலங்கை ராணுவத்தில் போருக்காக வடக்கு நோக்கிச் செல்லும் இளம் வீரர்களின் காட்சியைக் கண்முன்னே நிறுத்துகிறது. ராணுவப்படை தெருவில் நடந்து செல்லும்போது மகிழ்ச்சியாகச் செல்கிறார்கள் என்றாலும், எதிர்கொள்ளப்போகும் பயங்கரமான சூழ்நிலைகளை மறைத்துக்கொண்டு ஏதோவொரு தைரியத்தில் கிளம்பிவிட்டார்கள்.  இளமையும் மகிழ்ச்சியும் நிறைந்த இளம் வீரர்கள் தங்களது நாட்டுக்காக ஈடுபாட்டுடன் போருக்குச் செல்கிறார்கள்.

இலங்கை ராணுவ வீரர்கள்
இலங்கை ராணுவ வீரர்கள்

அவர்களின் நாட்கள் எண்ணப்படுவதைப் பற்றிக் கவலைப்படுகிறார். இளைஞர்களைக் கூண்டில் அடைக்கப்பட்ட கிளிகளுக்கு ஒப்பிட்டு, இறகுகளின் பசுமை நிறம் மங்குவதுபோல் இளைஞர்களின் அழிவும், இளமையின் கைவிடுதலும் சிறு வட்டத்திற்குள் நடுங்கியபடியே நாட்களை எண்ணிக்கொண்டே  நகரவேண்டியதைக் கண்டு  வேதனையடைகிறார்.  கிளிகளை வாங்கிச் சுதந்திரமாகப் பறக்கவிடத் துடிப்பது போல் இளையர்களும் இருக்கவேண்டுமென விரும்புகிறார்.     போர் மனிதகுலத்தின் மீது எவ்வளவு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும், இளம் உயிர்களின் அழிவையும் அதைக்கண்டு அச்சப்படும் மனமுமாகக் கவிதை நம்மை நெருங்கிவிடுகிறது. 

இலங்கையின் பாரம்பரியத்தை எளிமையாக வெளிப்படுத்தும் அதேசமயம் நவீன சவால்கள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகளையும் சொல்கிறார். பாரம்பரியத்தை நவீனத்துடன் சீராக இணைக்கும் திறன் கொண்ட கவிஞராகவும் இருக்கிறார். அவரது படைப்புகள் இலங்கை இலக்கிய மரபின் முக்கிய அங்கமாக மட்டுமல்ல, உலக இலக்கியத்துக்கு முக்கியப் பங்களிப்பாகவும் இருக்கின்றன. கவிதைகள் மென்மையான காட்சிகளாக விவரிக்கப்பட்டு வாசகர்களை அதன் உலகில் மூழ்கவைக்கிறது. சுற்றியுள்ள உலகைப் பற்றி உட்கார்ந்து சிந்திக்கும்போது, அவரது தனித்துவமான பார்வைகள் அற்புதமாகத் தெரிகின்றன. 

பெண்களுக்கான உரிமைகள்
பெண்களுக்கான உரிமைகள்

கமலா விஜேரத்ன சமூக விமர்சகராகவும் இருக்கிறார். சமூகத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சமூக அநியாயங்களைப் பற்றிய விமர்சனங்களையும் முன் வைக்கிறார். அவரது இன்னொரு முக்கியமான கவிதை நினைவுச்சின்னங்களைப் பேசுகிறது.

நினைவுச்சின்னம்


மெல்ல அசைந்தாடும் மரங்களைக் கடந்து

செல்கிறது பேருந்து

நீண்ட சாலை குளிரில் விரிகிறது

அடிப்பகுதி சத்தமிட்டபடி

சாலையின் ஓரத்தில் குலுங்குகிறது

பேருந்தில் ஏற்றுவதற்காக ஒரு கணம் நிற்கிறது

நிறுத்தத்தில் எழுதியிருப்பதைப் பார்க்கிறேன்

தங்கத்தால் பொறிக்கப்பட்ட

பாதையோர நினைவுச்சின்னம்

“என் மகனின் நினைவாக”

நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்

Representation Image

நாள்தோறும் பேருந்தில் கல்லூரிக்குச் சென்று திரும்பும் இவர் நிறுத்தங்களில்  தினமும் யாருக்கோ வைக்கப்படும் பதாகைகளைக் கண்டு பதறுகிறார்.     மரித்தவர்களுக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காணும் யாரோ ஒருவரின் முகத்தைக் கண்டு இன்று யாரோவென வைக்கப்பட்ட பதாகையைப் பார்த்து அதிர்கிறார்.  அதில் கண்டிப்பாகச் சொந்தமோ உறவினரின் பெயரோ இருந்துவிடக்கூடாதே என்ற பதட்டமும் சேர்ந்துகொள்கிறது.  போருக்குச் சென்ற இளம் வீரர்களைக் கண்டு பதட்டப்பட்ட மனம் தான் இறந்து போனவர்களின் நினைவுச் சின்னங்களைப் பார்த்து அதிர்கிறது. இக்கவிதையில் நினைவுச்சின்னங்கள் பெற்றோர்கள் தங்கள் இளையர்களைப் போரில் எவ்வாறு இழந்துகொண்டிருக்கிறார்கள், தங்களது மகன்களின் நினைவாகக் கட்டப்பட்டும் பதாகைகள்  தனது இளமைக் கால நினைவுகளுக்கு இழுத்துக் கொண்டு செல்கிறது என்று சொல்கிறார்.

கமலா விஜேரத்ன எழுதிய ஒரு மாணவனுக்கு என்ற கவிதை மிகச் சிறந்த கவிதை. அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கான வேண்டுகோள் என்றும் சொல்லலாம். தமிழர்கள், சிங்களவர்கள் என இரு குழுக்களுக்கும் போட்டி போட்டு போரால் தீவு தேசம் துண்டுத் துண்டாகக் கிழிக்கப்பட்டுக் கிடந்தது. புதர்கள், மரங்களிலிருந்து தொங்கும் மனிதச் சதைத் துண்டுகள், சிதறிய எலும்புத்துண்டுகள், மனித இரத்தத்தைக் கக்கும் சாலைகளென ஆசிரியர் தனது மாணவர்களைப் போலவே எல்லா இடங்களிலும் பார்க்கும் பரிதாபகரமாக, அல்லது பயமுறுத்தும் காட்சிகளில் சில. அதனால்தான், மாணவர்கள் வகுப்பில் பாடங்களைக் கேட்பதில்லை. ஆசிரியரை நேரடியாகப் பார்க்காவிட்டாலும் துப்பாக்கிச் சூடுகளும் கையெறிக் குண்டுகளும் அவர்களின் காதுகளை உடைக்கின்றன. இரத்தம் சொட்டும்  யாருக்காகவோ மனம் அதிர்கிறது. அவருடைய மாணவர்கள் தங்கள் சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் காதலர்களுக்கு ஏதேனும் ஆகியிருக்குமோவெனப் பயப்படுகிறார்கள்.

கமலா விஜேரத்ன
கமலா விஜேரத்ன

இலங்கையில் தமிழ்க் கவிதை நூற்றாண்டுகளாக வளர்ந்து விரிந்த வாசகப் பரப்பைக் கொண்டு நமக்கு அறிமுகமானவைதான் என்றாலும் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலும் அன்றாட வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன என்பதற்கு இவரது கவிதைகள் சான்றாக நிற்கின்றன. தமிழ்க் கவிஞர்கள் நவீன வடிவங்களைத் தேர்ந்தெடுத்து எழுதியதில் இலங்கையிலிருந்து வெளிவந்த கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.  தமிழ்ச் சமூகத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் போர் காலங்களின் பின்னணிகள் ஏற்படுத்தியுள்ள முக்கிய விளைவுகளுடன் கவிதைகள் படைக்கப்பட்டன. தொலைந்துகொண்டிருக்கும் அடையாளம், போராட்டம் நிறைந்த வாழ்வு மற்றும் மனிதத் தன்மையை ஆழமாகக் கொண்ட கவிதைகள் பல.   நவீன தமிழ்க் கவிதை பெரிதும் அரசியல் சார்ந்ததாக, சவால்களை எதிர்கொள்ளும் விதமாக இருந்திருக்கிறது. குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் போர் மற்றும் அரசாங்கத்தில் நடந்த குழறுபடிகள், அதன் தொடர்பான போராட்டம், கலை இலக்கியத்தின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன

தொடக்கத்தில் இன அடையாளம், மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது குறித்து விரிவான பார்வையாக இருந்தன. அரசியல் தன்னாட்சி, குழப்பம் மற்றும் கலாச்சார அழுத்தங்கள் ஒரு பக்கம் என்றால் போரின் தாக்கமும் மீள்தலும் மறுபக்கம், அழிபடும் தமிழர் பண்பாடும் சமூக அக்கறைகள் மீதான எதிர்ப்புகளும் வலுவடைந்தன. பெரும்பாலும் இலங்கையிலிருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு இடப்பெயர்ச்சி செய்வதும் இழப்புகளை மீட்டெடுப்படுப்பதும் இலக்கியத்துக்குள் வந்துள்ளன.

போரின் காரணமாக அகதிகளாக மாறிய தமிழர்களின் அன்றாட வாழ்வியல் போராட்டங்கள், நாடிழப்பின் துயரங்கள் தாண்டி, போர் காரணமாக உயிரிழந்தவர்களைப் பற்றிய பதிவுகள், சமூகத்தின் பொதுவான துக்கத்தைப் பற்றிப் பேசியிருக்கின்றன. குறிப்பாக மொழியையும் பண்பாட்டையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான அவசியம் குறித்தும் எழுதுகின்றனர்.

கமலா விஜேரத்ன
கமலா விஜேரத்ன

அதோடு மனித உரிமைகள் குறித்தும் அதிகமாக எழுதப்படுகின்றன. கமலா விஜெரத்னவின் போர்க்கவிதைகள் ஒருவருக்கானது மட்டுமல்ல, மொழியை வாழ்க்கையாகக் கொண்டவனின் வாழ்வியலைக் கவிதை வழியாக அறிய வைக்கும் முயற்சியெனச் சொல்வேன்.  அவ்வகையில் இலக்கியமென்பது அறிவுத்துறையாக மட்டுமின்றி அகத்தின் குரலைத் தட்டி எழுப்புவதாகவும் இருக்கிறது. 

நமது கனவுகளை யார் கட்டுப்படுத்த முடியுமென்றாலும் நிலம் இனிது என்ற பாரதியின் வரி சமூகத்தின் கூட்டுக்கனவு.

- சொற்கள் மிதக்கும்

தமிழி நிரலாக்கப் போட்டி... கலந்துகொண்டு அசத்திய கல்லூரி மாணவர்கள்!

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான ஸ்டர்ட்அப் டிஎன், தமிழ் இணையக் கல்விக் கழகம், செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள், வாணி பிழைதிருத்தி, அக்ரிசக்தி ஆகிய நிறுவனங்கள் இணைந்து வளர்ந்து வரும் நவீ... மேலும் பார்க்க

`கலாசாரத் திருட்டு’ - `Seeing Red’ இயக்குநர் ஷாலினி மீது எழுத்தாளர் ஜெயராணி கதைத் திருட்டு புகார்

தமிழ் ஊடகத்துறையில் 25 ஆண்டுகளாக பத்திரிகையாளராகவும், பல கட்டுரை நூல்களின் ஆசிரியராகவும் இருந்து வருபவர் எழுத்தாளர் ஜெயராணி. தற்போது 'போதி முரசு' என்ற இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டுவருகிறார். இவருடைய... மேலும் பார்க்க

கடல் தாண்டிய சொற்கள்: `அடிமைத்தனத்திலிருந்து மீளுதல்' கறுப்பினப் பெண்களின் குரலாக கவிஞர் மாயா ஏஞ்சலோ

கடல் தாண்டிய சொற்கள் - புதிய தொடர்இன்பாஉலகின் பல்வேறு நாடுகளில் பிறந்த கவிஞர்கள், பண்பாட்டின் அரசியலை, தத்துவத்தை, வாழ்வியலைத் தம் மொழியில் செதுக்கியிருக்கின்றனர். இப்படியான கவிஞர்கள் மொழிபெயர்ப்பு வா... மேலும் பார்க்க

Vikatan Play Contest : இது ரோலர் கோஸ்டர் பயணம்! | கோட்டைப்புரத்து வீடு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகம் - வாசகர்கள் நன்கொடை அளிக்கலாம்

காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. 'ரோஜா ஆர்ட்ஸ்' என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் ஓவியர். அந்த ரோஜா முத்தையாவின் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொள்ள, 'ரோஜா முத்தையா' ஆனார். எல்ல... மேலும் பார்க்க