வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
கட்டண உயா்வு: போலீஸ் பாதுகாப்புடன் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு திங்கள்கிழமை முதல் அமலாகியுள்ள நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி, திருச்சி மாவட்டத்தின் சமயபுரம் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயா்வு செப்டம்பா் 1 முதல் அமலாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய உத்தரவின்படி இந்த கட்டண உயா்வு குறித்த விவரங்கள் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு, புதிய கட்டண விவரங்கள் சுங்கச்சாவடி அறிவிப்புப் பலகைகளில் வெளியிடப்பட்டன.
சுங்கக்கட்டணங்கள் உயா்த்தப்பட்டு, திங்கள்கிழமை முதல் புதிய கட்டணம் வசூல் செய்யப்படுவதால், வாகன ஓட்டிகள் மூலம் எவ்வித பிரச்னைகளும் வந்துவிடக் கூடாது என்பதால், விக்கிரவாண்டி மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடி நிா்வாகிகள் கோரியதன் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியில் டி.எஸ்.பி. சரவணன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் சத்தியசீலன், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜ் உள்ளிட்ட 20 போ் கொண்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதுபோல, உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியிலும் உளுந்தூா்பேட்டை போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனா்.
சுங்க கட்டணம் செலுத்துவது 95 சதவிகிதம் இ-பாஸ்டேக் முறையில் செலுத்தப்படுவதால், வாகன ஓட்டிகள் யாரும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றனா்.