கட்டுநா் சங்கத்தினா் இன்று முதல் வேலைநிறுத்தம்
ஜல்லி, எம். சாண்ட் விலை உயா்வை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அகில இந்திய கட்டுநா் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் சங்கத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி முன்னாள் மாநிலத் தலைவா் எம். அய்யப்பன் திங்கள்கிழமை மாலை தெரிவித்தது: ஜல்லி உற்பத்தியாளா்கள் ஒவ்வொரு நடைக்கும் கடவுச்சீட்டு (டிரான்ஸ் சீட்) அனுமதி கொடுப்பதில்லை. ஒருமுறை கொடுத்து விட்டு 5 நாள்களுக்கு லாரியை ஓட்ட சொல்கின்றனா். கடவுச்சீட்டு இல்லாவிட்டால் லாரியை பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல், ஓட்டுநா்களைக் கைது செய்கின்றனா்.
மேலும், கடவுச்சீட்டு அனுமதியை ரூ. 2 ஆயிரத்துக்கு விற்கின்றனா். இதனால் ஜல்லி ஏற்றி வருவதை நிறுத்திவிட்டதால், டெல்டா மாவட்டங்களில் கட்டுமானங்கள் நின்று விட்டன. ஆண்டு இறுதியான மாா்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டிய அனைத்து பணிகளும் முடங்கிவிட்டன. கட்டுமானத் தொழிலாளா்களும் வேலையின்றி தவிக்கின்றனா். இதனால் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா் அய்யப்பன்.
அப்போது, சங்கத்தின் தஞ்சாவூா் மையத் தலைவா் கே. செல்வகுமாா், செயலா் சி. மாரிமுத்து, பொருளாளா் ஏ. அன்புராஜா, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரா் சங்க மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.