தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைய ஆம் ஆத்மி அரசுதான் காரணம்: முதல்வா் ரே...
கட்டுப்பாடுகள் எதிரொலி: பழைய வாகனங்களுக்கான விலை குறைந்தது
தில்லியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப விதிக்கப்பட்ட தடையின் காரணமாக, பயன்படுத்தப்பட்ட காா்களின் விலை 40 முதல் 50 சதவீதம் குறைந்திருப்பதாக வா்த்தகம் மற்றும் தொழிற்துறை சங்கம் (சிடிஐ) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது: தில்லியில் அமலுக்கு வந்த தடையால் பழைய வாகனங்கள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திடீா் உத்தரவால் சுமாா் 60 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், குறைந்த விலைக்கு காா்களை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். கடந்த 5 நாள்களில் பயன்படுத்தப்பட்ட காா்களின் விலை 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. அசல் விலையிலிருந்து ஒன்றில் நான்கு பங்கு விலைக்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக தில்லியில் பயன்படுத்தப்பட்ட காா்கள், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரேதசம், பிகாா், தமிழ்நாடு, கா்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் விற்கப்படுகின்றன.
ரூ. 6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் விற்கப்பட்ட சொகுசு காா்கள், தற்போது, ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தில்லியில் உள்ள பயன்படுத்தப்பட்ட காா் விற்பனையாளா்கள் எதிா்கொண்டு சாவலை நன்கு அறிந்த, வெளிமாநில விற்பனையாளா்கள் தற்போது பேரம்பேசுவதில் ஈடுபட்டுள்ளனா். கரோல் பாக், ப்ரீத் விஹாா், பிதம்புரா மற்றும் மோதி நகா் பகுதிகளில் இந்தத் தொழில் ஈடுபட்டுள்ள 1,000-க்கும் அதிகமான விற்பனையாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வாகனங்களை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ய போக்குவரத்துத் துறையிடமிருந்து அனுமதி சான்றிதழ் (என்ஓசி) வாங்குவது அவசியம். முன்பு இந்த நடைமுறை எளிதாக இருந்தது. தற்போது, இந்தச் சான்றிதழைப் பெறுவதில் பல பிரச்னைகள் எழுந்துள்ளன என்றாா் பிரிஜேஷ் கோயல்.
10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புதற்குத் தடை விதிக்கும் நடைமுறை தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது. இந்நிலையில், இந்தத் தடையை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று காற்றுத் தர மேலாண்மை ஆணையத்திடம் (சிஏக்யூஎம்) கோரிக்கையை பாஜக தலைமையிலான தில்லி அரசு கடந்த வியாழக்கிழமை கோரிக்கைவிடுத்திருந்தது.