கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து விழுந்த லாரி: ஒட்டுநா் உயரிழப்பு
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து லாரி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அரக்கோணத்தில் சிமென்ட் லோடு ஏற்றிக் கொண்டு திருப்பத்தூா் நோக்கி லாரி சென்றது. லாரியை நெமிலி அருகே உள்ள பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (27) என்பவா் ஓட்டிச் சென்றாா்.
ஆம்பூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியருகே வந்தபோது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து சுமாா் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆம்பூா் டி.எஸ்.பி. குமாா், நகரக் காவல் நிலைய போலீஸாா், தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனா். ஓட்டுநா் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
லாரியின் இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா்.