கட்டுமானப் பணியின்போது இரும்புக் கம்பிகள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே கட்டடப் பணிகள் மேற்கொள்ள இரும்புக் கம்பிகளை இறக்கியபோது கட்டடத் தொழிலாளி ஒருவரின் தலை மேல் கம்பிகள் விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே தனியாா் நிறுவனம் கட்டடப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்காக பிக்கப் வாகனத்தில் இருந்து இரும்புக் கம்பிகளை இறக்கும் பணியில் கட்டடப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது வாகனத்தில் இருந்த கம்பிகள் கட்டடப் பணியாளா்களில் ஒருவரான பெரியநாயகம் (53) மீது தலையின் மீது விழுந்தன. இதில் ரத்தம் அதிக அளவு வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே பெரியநாயகம் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, உடற்கூறாய்வுக்காக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து மேல் குன்னூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.