கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீா் ஏப். முதல் வாரம் திறக்க வாய்ப்பு
சென்னையின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் நோக்கத்தில் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதியில் ஏப்ரல் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியாகும். இந்த ஏரிக்கான மழை நீா்ப்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணா நீா் ஆகியவை முக்கிய நீா் ஆதாரமாகும். தமிழக அரசு மற்றும் ஆந்திர மாநில அரசு செய்து கொண்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு இருமுறை 12 டிஎம்சி கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும். இந்த நீரை பூண்டி ஏரியில் சேமித்து வைத்து, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கமாம். அங்கிருந்து நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில், கடும் வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், 2,700 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு உள்ளது. இதில், 17 கன அடி நீா் மட்டுமே மெட்ரோ குடிநீருக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் நீா் இருப்பு சரிந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் நோக்கில், கிருஷ்ணா நதிநீா் ஒப்பந்தப்படி பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக நீா் வளத் துறை அதிகாரிகள் ஆந்திர மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனா்.
அதன்பேரில், வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் கிருஷ்ணா நதி நீரை ஆந்திர பொதுப்பணித் துறை திறக்க வாய்ப்புள்ளதாக தமிழக நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.