Wolfdog: 'ஓநாயுடன் கலப்பு' - ரூ.50 கோடிக்கு அரிய வகை நாயை வாங்கிய பெங்களூரு நபர்!
உலகம் முழுவதுமே மனிதர்களிடம் பிரபலமான செல்லப்பிராணியாக நாய்கள் இருக்கின்றன. நாய்கள் அதன் மேல் அதன் உரிமையாளர்கள் கொண்டிருக்கும் அன்பும், ஒரு நல்ல நாய்க்காக அவர்கள் செய்யும் விஷயங்களும் ஆச்சர்யப்படுத்துவதாக இருக்கும்.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு நபர், ரூ.50 கோடிக்கு ஒரு நாயை வாங்கியுள்ளார். இதுதான் உலகிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட நாய் எனக் கூறப்படுகிறது.
बेंगलुरु में 50 करोड़ का DOG खरीदा गया है
— Arjun Chaudharyy5 (@Arjun5chaudhary) March 20, 2025
बेंगलुरु में कुत्तों की खरीद-बिक्री करने वाले एक कारोबारी ने अमेरिका में एक अनोखे कुत्ते को 57 लाख अमेरिकी डॉलर (लगभग 50 करोड़ रुपये) देकर खरीदा है. यह एक बिल्कुल अलग तरह का भेड़िये के जैसा दिखने वाला "वुल्फ़डॉग" है. pic.twitter.com/oeeAJrA2ql
எஸ்.சதிஷ் என்ற நபர் பெங்களூரைச் சேர்ந்த நாய் ஆர்வலர். பிப்ரவரி 2025-ல் இவர் 50 கோடி ரூபாய்க்கு உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாயை வாங்கியுள்ளார். அதன் பெயர் கடப்பாம் ஒகாமி.
7 ஏக்கர் பண்ணை; மக்களின் ஆர்வம்
சதிஷ், "எனக்கு நாய்கள் மிகவும் பிடிக்கும் என்பதனால் இத்தனை விலை கொடுத்து இந்த குட்டியை வாங்கினேன். எனக்கு தனித்துவமான நாய்களை வாங்கி அவற்றை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவது பிடிக்கும்" எனப் பேசியிருக்கிறார்.
ஒகாமி மட்டுமல்லாமல் சதிஷ் 150க்கும் மேலான நாய் இனங்களை வளர்த்து வருகிறார். இதற்காக பெங்களூரில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணையும் 6 வேலையாட்களும் வைத்துள்ளார்.
தான் வைத்திருக்கும் அரியவகை நாய்களை நிகழ்ச்சிகளில் ஆர்வலர்களுக்கும், பொது மக்களுக்கும் காட்சிபடுத்தி பணம் ஈட்டுகிறார்.
அவர் விலையுயர்ந்த நாயுடன் இருக்கும் வீடியோ ஆன்லைனில் வைரலாகியிருக்கிறது. "நான் இந்த நாய்கள் மிகவும் அறியவகையானவை என்பதனால் இவற்றில் அதிகம் பணத்தை செலவிடுகிறேன். மக்கள் இவற்றைப் பார்க்க எப்போதும் ஆவலாக இருப்பதனால் எனக்கு போதுமான பணம் கிடைக்கிறது. மக்கள் இவற்றுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்.
திரையரங்குகளில் வரும் நடிகர்களை விட நானும் என் நாய்களும் அதிகமாக மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறோம்" என்றும் கூறியுள்ளார் சதிஷ்.
ரூ.50 கோடி நாய் பற்றி தெரியுமா?
கடப்பாம் ஒகாமி, அரியவகை உல்ஃப் டாக் இனத்தில் மிகவும் தனித்துவமானதாகும். இது ஓநாய் மற்றும் காக்கேசியன் செப்பர்டு (caucasian shepherd) நாயின் கலப்பாகும்.
எட்டுமாத நாயான ஒகாமி, அமெரிக்காவில் பிறந்தது. இதற்கு தினமும் 3 கிலோ கறி உணவாக வழங்கப்படுகிறது.

பொதுவாக உல்ஃப் டாக் நாய்கள், புத்திசாலியானவை மற்றும் பாதுகாக்கக் கூடியவை. இந்த நாய் செப்பர்டு நாயின் கலப்பாகவும் இருப்பதனால் சிறந்த காவல் நாயாகவும் இருக்கும் என்கின்றனர்.
இது கட்டுமஸ்தான உடலும் பஞ்சு போன்ற முடியும் கொண்டு வளரும்.
உல்ஃப் டாக் மட்டுமல்லாமல் சதிஷிடம் சௌசௌ என்ற அரியவகை நாயும் உள்ளது. சீனாவில் இருந்து வந்த பாண்டா போல தோற்றமளிக்கும் இந்த நாயை கடந்த ஆண்டு 28 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார் சதீஷ்.