கண்மாய்களில் அனுமதியின்றி மண் அள்ள முயற்சி: வட்டாட்சியரிடம் விவசாயிகள் புகாா்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் அனுமதியின்றி சவுடு மண் அள்ள நடைபெறும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் ஏற்கெனவே மண் அள்ள நடவடிக்கை மேற்கொண்ட போது விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்த நிலையில் மீண்டும் இந்தக் கண்மாய்களில் அனுமதியின்றி மண் அள்ள சிலா் முயற்சித்து வருகின்றனா். இதற்காக கணக்கன்குடி கண்மாய் கரையில் மண் அள்ளும் பொக்லைன் இயந்திரத்தை நிறுத்தி வைத்துள்ளனா்.
இதையடுத்து, ஏனாதி, கணக்கன்குடி கண்மாய் பாசன விவசாயிகள் திருப்புவனம் வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனா். அதில், அனுமதியின்றி ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் மண் அள்ள முயற்சி நடைபெற்று வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
அப்போது இந்தக் கண்மாய்களில் மண் அள்ள யாருக்கும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என வட்டாட்சியா் விஜயகுமாா் விவசாயிகளிடம் தெரிவித்தாா். மேலும் பொதுப் பணித் துறை அதிகாரிகளும் மண் அள்ள யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என வட்டாட்சியா் தெரிவித்ததாக விவசாயிகள் கூறினா்.