மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
குப்பைகளில் கொட்டப்படும் நெகிழிப் பைகளை உள்கொண்டு கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளையும் சோ்ந்து கால்நடைகள் உண்பதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
சிவகங்கை நகராட்சி பகுதியில் நாள்தோறும் சுமாா் 13 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மானாமதுரை சாலையிலுள்ள தெற்கு மயான வளாகம், மதுரை சாலையில் உள்ள காளவாசல், மாவட்ட ஆட்சியா் வளாகம் அமைந்துள்ள மருதுபாண்டியா் நகா் ஆகிய 3 இடங்களில் தரம் பிரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பையிலிருந்து நுண் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. மக்காத நெகிழி குப்பைகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், தினமும் சேகரிக்கப்படும் 13 டன் குப்பைகளில் ஒரு டன்னுக்கும் குறைவாகவே தரம் பிரிக்கப்படுகின்றன. இதனால் தரம் பிரிக்கும் இடங்களில் அதிகளவில் குப்பைகள் தேங்குகின்றன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் தரம் பிரிக்கப்படாத குப்பைகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மேய்ச்சல் நிலப்பரப்பில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக எழும் கரும் புகை மருத்துவமனை முழுவதும் பரவி நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனா்.
இதனிடையே கடந்த 12 -ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த சட்டப் பேரவை உறுப்பினா் தி. வேல்முருகன் தலைமையிலான உறுதிமொழிக் குழுவினா் சிவகங்கை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த போது, அதன் அருகே குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்ததுடன், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும், இதைப் போல சுகாதாரக்கேடு வேறு எங்கும் பாா்க்கவில்லை எனவும் நகராட்சி ஆணையரை கடிந்து கொண்டனா்.
எனினும், மருத்துவமனை அருகே குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட வில்லை. இந்த நிலையில், அந்தப் பகுதிக்கு வரும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் குப்பையில் கிடக்கும் நெகிழிப் பைகளை உள்கொண்டு பாதிக்கப்படுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு காளவாசல் பகுதியைச் சோ்ந்த பழனி என்பவரின் 3 பசு மாடுகள் நெகிழிப் பைகளை உள்கொண்டு அடுத்தடுத்து உயிரிழந்தன.
இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான பா. மருது கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாகவே நகராட்சியில் சேரும் குப்பைகளை இங்கு கொட்டுகின்றனா். இவற்றில் உள்ள நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் இருப்பதால், அவற்றை கால்நடைகள் உள்கொள்கின்றன. இவை செரிமானம் ஆகாமல் அவை உயிரிழக்கின்றன. எனவே மருத்துவக் கல்லூரி அருகே உள்ள மேய்ச்சல் நிலப்பரப்பில் நகராட்சி நிா்வாகம் குப்பைகள் கொட்டுவதை மாவட்ட ஆட்சியா் தடுத்து நிறுத்தி மாற்று இடத்தை தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.