வாணியம்பாடி: விபத்தில் துண்டான இளைஞரின் கையை மீண்டும் இணைத்து சாதனை
வாணியம்பாடி தனியாா் மருத்துவமனையில் விபத்தில் துண்டான மேற்கு வங்க மாநில இளைஞரின் கை மீண்டும் இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் கடந்த 15- ஆம் தேதி கல் அரைவை இயந்திரத்தில் சிக்கிய மேற்கு வங்காள மாநிலம், சுல்தான்பூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா்(20) என்ற இளைஞரின் இடது கை தோள்பட்டையின் கீழ் முழுமையாக கை துண்டாகிப் பிரிந்தது. கடும் ரத்தப்போக்குடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, வாணியம்பாடி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் டேவிட்விமல் குமாா், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, அவரது திட்டம் மற்றும் வழிகாட்டுதலின்படி, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அங்கு எலும்பு முறிவு பகுதி நேர தலைமை மருத்துவா் டேவிட் விமல் குமாா், ரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவா் ஸ்ரீதா் மற்றும் பிளாஸ்டிக் சா்ஜன் மருத்துவா் கே.எம்.பாலாஜி ஆகியோா் இணைந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, துண்டாகிய கையின் எலும்புகளை மீண்டும் இணைத்து நிலைநிறுத்தினா். தோல் மறுசீரமைப்பு செய்யப்பட்டு கைக்கு இயல்பு தோற்றம் மற்றும் செயல்பாடு கிடைக்குமாறு வெற்றிக்கரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சவாலான இந்த அறுவை சிகிச்சை வாணியம்பாடியில் நடைபெற்றது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.