கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: இலங்கை அரசு சம்மன்!
கனடாவில் புதியதாகத் திறக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு தூதருக்கு இலங்கை அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் அந்நாட்டிலிருந்து வெளியேறிய லட்சக்கணக்கான தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அதில், பெரும்பாலான மக்கள் கனடாவில் வசித்து வருகின்றனர்.
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் பிராம்டன் நகரத்தில் அந்நாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் அரசின் உதவியுடன் தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டது. இது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவில் திறக்கப்பட்ட இந்தப் புதிய நினைவகத்துக்கு எதிராக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துக்கொள்ளுமாறு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜிதா ஹெராத் அந்நாட்டின் கனடா தூதர் எரிக் வால்ஷ்-க்கு சம்மன் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது, இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் எந்தவொரு நம்பகமான ஆதாரமற்றவை எனவும், திசைத் திருப்பும் முயற்சியெனவும் இலங்கை அரசு கூறியுள்ளது.
மேலும், இந்தத் தவறான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு முழுவதுமாக மறுத்ததுடன், நினைவகம் கட்டப்பட்ட விவகாரம் முழுவதும் கனடா தேர்தல் ஆதாயத்திற்கான பிரச்சாரம் எனத் தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.
இத்துடன், கடந்த 2021-ம் ஆண்டு கனடா வெளியுறவு, வர்த்தகம் மற்றும் வளர்ச்சித் துறை இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கண்டுபிடிக்கவில்லை என உறுதி செய்ததை அந்த அறிக்கையில் இலங்கை அரசு மேற்கொள் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வெளிநாடுகளில் யாசகம் எடுத்து வந்த 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்!