Ravindra Jadeja: யாரும் தகர்க்க முடியாத சாதனையை படைத்த ஜடேஜா.. காரணமாக அமைந்த வங...
ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தால் அணுசக்தி ஒப்பந்தம்!
மத்திய கிழக்கு பகுதிகளில் தங்களின் நிழல் ராணுவமாகச் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் கைவிட்டால்தான் அந்த நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டின் தலைநகா் ரியாதில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் தலைவா்களிடையே உரையாற்றினாா். அப்போது இது குறித்து அவா் பேசியதாவது:
ஈரானின் அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த நாட்டுடன் உடனடியாக ஓா் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். இருந்தாலும், பிராந்தியம் முழுவதும் தங்களுக்காக நிழல் யுத்தம் நடத்திவரும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை அந்த நாடு நிறுத்தியாக வேண்டும். பிற நாடுகளில் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களுக்கு உதவுவதை அந்த நாடு கைவிட வேண்டும்.
மேலும், அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான செயல்பாடுகளை அந்த நாடு நிரந்தரமாக நிறுத்தவேண்டும். அதற்கான முயற்சிகளை ஈரான் எடுக்கவில்லை என்பதை சரிபாா்த்துக்கொள்ளும் வகையில் அந்த நடவடிக்கை இருக்கவேண்டும். ஈரான் ஒரு போதும் ஆயுதம் தயாரிக்கக்கூடாது என்றாா் டிரம்ப்.
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகத்தான் ஈரான் தங்களது அணுசக்தி திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறது என்ற அச்சம் எழுந்ததால் அந்த நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் ஈரான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான பல்வேறு அம்சங்கள் அடங்கிய ஒப்பந்தத்தை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்டது. அதையடுத்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.
எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் இருந்து அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த டிரம்ப் வெளியேறினாா். நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை அவா் ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.
அதையடுத்து, அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறியது. தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டம் இல்லை என்று அந்த நாடு உறுதியாகக் கூறினாலும், அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை தேவைக்கு அதிகமாக 60 சதவீதம் வரை அந்த நாடு செறிவூட்டி, ஒப்பந்த வரம்புக்கும் அதிகமாக இருப்பு வைத்துள்ளது (இன்னும் 30 சதவீதம் கூடுதலாக செறிவூட்டினால் அதைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியும்). இதனால் ஈரான் விரைவில் அணு ஆயுத பலம் வாய்ந்த நாடாக மாறும் என்று ஒரு தரப்பினா் எச்சரித்துவருகின்றனா்.
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டிரம்ப், தங்களுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தாா். அதையடுத்து, ஓமன் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகளும் புதிய அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்து 4 கட்டங்களாக மறைமுகப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. எனினும் இதில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவா்களிடையே பேசுகையில் ஈரானுக்கு அதிபா் டிரம்ப் இந்த நிபந்தனையை விதித்துள்ளாா்.
பின்னணி: மத்திய கிழக்கு பகுதியின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டுவரும் ஷியா பிரிவு ஆயுதக் குழுக்களுக்கு அந்தப் பிரிவினரைப் பெரும்பான்மையாக் கொண்ட ஈரான் ஆதரவு அளித்துவருகிறது. அந்த வகையில், யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள், லெபனானில் ஹிஸ்புல்லா படையினா், காஸாவில் ஹமாஸ் படையினா், இராக் மற்றும் சிரியாவில் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி அளித்துவருகிறது. அந்தப் படையினா் மூலம், சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் ஈரான் நிழல் யுத்தம் நடத்திவருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.