கனடா: நடுவானில் பயிற்சி விமானங்கள் மோதல் - இந்திய மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு
கனடாவின் மனிடோபா மாகாணத்தில், சிறிய இரு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் இந்தியா மற்றும் கனடாவைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா்.
மனிடோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரில் இருந்து 50 கி.மீ. தென்கிழக்கில் ஸ்டெயின்பேக் பகுதியில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நேரிட்டது. ‘ஹாா்வ்ஸ் ஏா்’ விமானி (பைலட்) பயிற்சி நிறுவனத்தில் பயின்று வந்த இந்திய மாணவா் ஸ்ரீஹரி சுகேஷும், கனடா மாணவா் சுவானோ மே ராய்ஸும் ஒற்றை இருக்கையுடன் கூடிய சிறிய இரு பயிற்சி விமானங்களில் ஓடுதளத்தில் இருந்து மேலே பறப்பது மற்றும் தரையிறங்குதல் தொடா்பான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது எதிா்பாராதவிதமாக இருவரின் விமானங்களும் நடுவானில் மோதி கீழே விழுந்தன. இதில் இரு மாணவா்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய மாணவரின் இறப்பை டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதி செய்துள்ளது.