செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
கனடா பிரதமராகும் மார்க் கார்னே! அமெரிக்காவுடனான உறவுக்கு முடிவு என அறிவிப்பு!
அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னே பதவியேற்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார்க் கார்னே, அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டதாக தெரிவித்தார்.
கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய பிறகு லிபரல் கட்சியின் தலைவராகவும் புதிய பிரதமராகவும் பதவியேற்ற மார்க் கார்னே, சில நாள்களிலேயே அமைச்சரவையைக் கலைத்து தேர்தலை அறிவித்தார்.
கனடாவைக் கைப்பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், திங்கள்கிழமை(ஏப். 28) வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(ஏப். 29) காலை வாக்குப்பதிவு அனைத்து பகுதிகளிலும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் ஆளும் லிபரல் கட்சிக்கும், கன்சா்வேட்டிவ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, லிபரல் கட்சி 167 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 145 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, கனடாவில் வெற்றிக் கொண்டாட்டத்தை லிபரல் கட்சியினர் தொடங்கியுள்ளனர்.
லிபரல் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஒட்டாவாவில் ஆதரவாளர்களுடன் பேசிய மார்க் கார்னே,
“அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டது. அமெரிக்கா செய்த துரோகத்தின் அதிர்ச்சியில் இருந்து நாம் மீண்டுவிட்டோம். ஆனால், நாம் கற்றுக்கொண்ட பாடங்களை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நாம் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இந்த வர்த்தகப் போரில் நாம் வெற்றி பெறுவோம். அமெரிக்கா நம்மை சொந்தமாக்கிக் கொள்வதற்காக நம்மை பிளவுபடுத்த அதிபர் டிரம்ப் முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது.” எனத் தெரிவித்தார்.