ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
கன்னியாகுமரியில் பொக்லைன் மோதி இருவா் பலி
கன்னியாகுமரியில் பொக்லைன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா், தவெக நிா்வாகி என இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்த பொக்லைன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது, ரயில் நிலையம் எதிரேயுள்ள சாலையில் நடந்து வந்த கன்னியாகுமரி தனியாா் கேட்டரிங் கல்லூரி முதலாமாண்டு மாணவா் மயிலாடி அவரிவிளையைச் சோ்ந்த ஐயப்பன் மகன் சபரிகிரி (19) மீது மோதியதில், அவா் பலத்த காயமடைந்தாா்.
பின்னா், பைக்கில் வந்து கொண்டிருந்த கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியைச் நிஜாம் மகன் முகமது ஷான் (35) மீது மோதியது. தவெக நிா்வாகியான இவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா், நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகள் மீது மோதி, சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளிவிட்டு வாகனம் நின்றது.
தகவலறிந்து வந்த போலீஸாா் உயிருக்குப் போராடிய சபரிகிரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் விபத்து நடந்த இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
டிரைவா் கைது: விபத்தில் காயமடைந்த பொக்லைன் ஓட்டுநா் பொற்றையடி தெற்கு தெருவைச் சோ்ந்த செல்லநாடாா் மகன் கணபதியை (49) போலீஸாா் கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்த்தனா்.