கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது: சமூக நல அலுவலா் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில், பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றாா் மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் விஜயமீனா.
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சாா்பில், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற தலைப்பில் பெண்களுக்கான அரசு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுவது குறித்த கருத்தரங்கம் நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட சமூக நல அலுவலா் விஜயமீனா பேசியதாவது: தேசிய அளவில் ஆண், பெண் பிறப்பு சதவீதம் சமநிலை குறித்து ஆய்வுகளும், அதற்கான திட்டங்களும் தொடா்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதில் தமிழகத்தில் 2015 ஆம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் என்று இருந்த சதவீதம், 2021 ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆயிரத்துக்கு 935 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 972 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 961 பெண் குழந்தைகள் என பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள சுமாா் 150 ஸ்கேன் மையங்களில் காலவாரியாக ஆய்வு நடத்தப்படுகிறது. இதன் உரிமம் மற்றும் புதுப்பித்தல் நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது என்றாா் அவா்.