டங்ஸ்டன் சுரங்க ஏல முடிவை மத்திய அரசு விரைவில் திரும்பப்பெறும்: கே.அண்ணாமலை பேட்...
கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சமுதாய நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது ஒவ்வொரு ஆண்டும், முதல்ரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளா்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவா்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இவ்விருதினைப் பெறத் தகுதியுடையவராவா்.
இந்த விருது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
மூன்று பிரிவுகளில், தலா ஒரு நபா் வீதம் மூவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.முறையே ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000-க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.
2025-ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீா் புரஸ்காா் விருதை பெற தகுதியானவா்கள் இணையதளம் மூலம் டிச.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், கூடுதல் விவரங்கள் பெற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 7401703474 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.