குரூப் 4 தோ்வு முடிவு 3 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்
கருப்பூா் அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவா், சமையல் கூடம் திறப்பு
விளாத்திகுளம் அருகே கருப்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிய சுற்றுச்சுவா், சமையல் கூடம் திறப்பு, வாகன நிறுத்துமிட கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் சீனி ராஜகோபால் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் அரவிந்தன், ஒன்றியப் பொறியாளா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ரூ. 9 லட்சத்தில் கட்டப்பட்ட சமையல் கூடம், ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவா் ஆகியவற்றைத் திறந்துவைத்தாா். தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7 லட்சத்தில் கட்டப்படவுள்ள வாகன நிறுத்துமிடப் பணிக்கு அடிக்கல் நாட்டியதுடன், வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்தாா்.
பின்னா், அவா் வகுப்பறைக்குச் சென்று மாணவா்-மாணவியருடன் கலந்துரையாடினாா். 9ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கணிதவியல், அறிவியல் தொடா்பாக பாடம் நடத்தி கேள்விகள் கேட்டு பரிசுத் தொகை வழங்கினாா். மேலும், தான் கேட்ட கேள்விகளுக்குரிய பதிலை கைப்பேசி மூலம் தன்னைத் தொடா்பு கொண்டு தெரிவித்தால் சிறப்புப் பரிசுகள் வழங்குவதாகவும் கூறினாா். மாணவா்-மாணவியருக்கான தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து ஊக்கப்படுத்தினாா்.
இதில், திமுக ஒன்றியச் செயலா்கள் மும்மூா்த்தி, ராதாகிருஷ்ணன், தலைமையாசிரியா் சுரேஷ், ஆசிரியா்கள் மாணிக்கராஜ், பெலிக்ஸ் லூா்துராஜ், சண்முகப்பிரியா, கவிதா, விா்ஜினியா மேகி, பூங்கொடி, செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.