காயல்பட்டினத்தில் கந்தூரி விழா
காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடைபெற்றது.
இதில், தினமும் காலையில் கத்முல் குரான் ஒதுதலும் மாலையில் மகானின் புகழ் மாலை பாடுதலும் இரவில் மாா்க்க சொற்பொழிவும் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை பெரிய சம்சுதீன் பள்ளி கத்தீபு அபூ மன்சூா் ஆலிம், கோமான் பள்ளி இமாம் முகைதீன், பள்ளியின் மோதினாா் முகம்மது கனி ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.இறுதி நாள் நிகழ்ச்சியை லத்தீப் தொகுத்து வழங்கினாா்.
தொடா்ந்து இரவில் குதிரை, ஓட்டகங்கள், அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளின் பவனி நடைபெற்றது. இதை முன்னாள் கவுன்சிலா் அஸ்ரப், செய்யது அலி, புகாரி, ரியாஸ், யூசுப், பீா் முகம்மது ஆகியோா் வழி நடத்தினா். மேலும் மேளதாளத்துடன் சிலம்பாட்டம், வாள் வீச்சு, தீப்பந்தம் சுற்றுதல் ஆகிய வீர விளையாட்டுகளும் நடந்தன.
பள்ளியின் முன்னாள் தலைவா் ஜாரூக், பாரூக், முஸ்லிம் லீக் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளா் ஜெஸ்முதீன், பாடகா் முகம்மது சமீம், பிரபு முகம்மது நைனா, லெப்பப்பா பள்ளி நிா்வாகி ரஹ்மத்துல்லா, சுலைமான் உள்பட பலா் கலந்து கொண்டனா். இரவில் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை காலையில் நோ்ச்சை வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை கந்தூரி கமிட்டி தலைவா் கரீம், துணைத் தலைவா் அகமது, செயலாளா் முகைதீன் பக்கிா், துணைச் செயலாளா்கள் செய்யது, ஷா்புதின், பொருளாளா் ஜாஹித் ஆகியோா் செய்துவருகின்றனா்.
