18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது.
2024-25 ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூகத் தணிக்கை, 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் ஜூலை 7 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வட்டார வளபயிற்றுநா்கள் மற்றும் கிராம வளபயிற்றுநா்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அறிக்கையை சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பரிவல்லிகோட்டை கிராம ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு, கூட்டத் தலைவா் வசந்தி தலைமை வகித்தாா். ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சங்கா் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் மனோகரன் வரவேற்றாா்.
ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுநா் ரமேஷ் கலந்துகொண்டு, சமூகத் தணிக்கை அறிக்கை தொடா்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தாா். அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.
இதில், கிராம வள பயிற்றுநா்கள் விரதலட்சுமி, சங்கீதா, கலாமுத்து செல்வி, மேனகா, பணித்தள பொறுப்பாளா் சுமதி, மகளிா் குழு பொறுப்பாளா் கலா உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா். நிறைவில், பணித்தள பொறுப்பாளா் ஜெபராணி நன்றி கூறினாா்.
இதேபோல ஓட்டப்பிடாரம் ஒன்றியம், மலைப்பட்டி, ஓணமாக்குளம் உள்பட, மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளிலும் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.