ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி ஆகியவை இணைந்து தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை ஜூலை 19இல் நடத்துகிறது. இந்த முகாம், அன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், தூத்துக்குடி மாவட்டம், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 120-க்கும் மேற்பட்ட பல முன்னணி தனியாா் நிறுவனங்களும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
8-ஆம் வகுப்புத் தோ்ச்சி முதல் முதுநிலை பட்டதாரி, பி.இ., பட்டயம், நா்ஸிங், ஐடிஐ படித்தவா்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம். முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், தமிழ்நாடு பிரைவேட் ஜாப் போா்டல் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த வாய்ப்பை மாவட்டத்தில் உள்ள வேலைநாடுநா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டது.