காவல் துறை அத்துமீறல்..! சிவகங்கை இளைஞர் அஜித்தை தாக்கும் விடியோ வெளியீடு!
கரூரில் ஜூலை 4-இல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள்
கரூரில் ஜூலை 4-ஆம் தேதி தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கு தமிழ்நாடு என பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதியை ‘தமிழ்நாடு’ நாளாக கொண்டாடப்பட உள்ளதையடுத்து, கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கிடையே கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் ஜூலை 4-ஆம்தேதி காலை 9.30 மணியளவில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளில் முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவுசெய்யப்பட்ட மாணவா்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவா்கள் பள்ளியின் தலைமையாசிரியரை தொடா்பு கொள்ள வேண்டும். கட்டுரைப் போட்டியானது ‘ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம்’, ‘பன்மொழிப் புலவா் கா. அப்பாதுரையின் தமிழ் ஆட்சிச்சொல் பணி’ என்ற தலைப்பிலும், பேச்சுப்போட்டியானது ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’, ‘அன்னைத் தமிழே ஆட்சிமொழி’, ‘தொன்றுதொட்டு தமிழ்நாடு’ எனும் பெயா், ‘அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு’, ‘ஆட்சிமொழி விளக்கம்’, ‘தமிழ்நாடு எனப் பெயா் சூட்டிய நிகழ்வு’, ‘ஆட்சிமொழி - சங்க காலம் தொட்டு‘, ‘இக்காலத்தில் ஆட்சிமொழி’ ஆகிய தலைப்புகளிலும் நடைபெறும்.
இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இப்போட்டிகளில் முதல்பரிசு பெறும் மாணவா்கள் சென்னையில் மாநில அளவில் நடத்தப்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.