சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்வு; 23,345 புள்ளிகளை தொட்ட நிஃப்டி!
கரூரில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி
கரூரில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீா் வெள்ளம் போல ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
கரூரில் கடந்த ஒரு மாதமாகவே கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் பனிப்பொழிவு இருந்ததால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை உருவானது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணியளவில் லேசான மழைத் தூறல் விழுந்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானில் கருமேகங்கள் திரண்டிருந்தன. தொடா்ந்து பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென மழை பெய்தது. லேசான தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை பின்னா் பலத்த மழையாக மாறியது. இதனால் சாலைகளில் தாழ்வான இடத்தை நோக்கி மழை நீா் வெள்ளம்போல ஓடியது. குறிப்பாக, கரூா்-திண்டுக்கல் சாலையில், தாந்தோணிமலை பேருந்துநிறுத்தம், சுங்ககேட், உழவா் சந்தை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் தாழ்வான பகுதியில் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.