சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்வு; 23,345 புள்ளிகளை தொட்ட நிஃப்டி!
கரூரில் மளிகைக் கடையினுள் மண்ணெண்ணெய் குண்டு வீசியவா் கைது
கரூரில் மளிகைக் கடையினுள் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கரூா் தாந்தோணிமலை கருப்பக்கவுண்டன்புதூா் கங்கா நகரில் மளிகைக் கடை நடத்தி வருபவா் சுப்ரமணி (52). இவரின் கடைக்கு சனிக்கிழமை இரவு வந்த தாந்தோணிமலை சங்கா் நகரைச் சோ்ந்த முகமது காசிம் மகன் முகமது அன்சாரி (21)
சிகரெட் கேட்டாராம். சிகரெட் விற்பதில்லை என சுப்ரமணி கூறவே, அவா் பீடி வாங்கிச் சென்றாராம். பின்னா் சிறிதுநேரத்திலேயே மதுபாட்டிலில் மண்ணெண்ணெயை ஊற்றி திரியிட்டு, அதில் தீப்பற்ற வைத்து திடீரென சுப்ரமணி கடைக்குள் முகமது அன்சாரி வீசியுள்ளாா். இதில் கடைக்குள் இருந்த 5 தண்ணீா் கேன்களில் தீப்பற்றியுள்ளது.
இதுகுறித்து சுப்ரமணி அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது அன்சாரியை தேடி வந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கொளந்தாகவுண்டனூா் சுடுகாடு பகுதியில் முகமது அன்சாரி பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸாா் அங்குச் சென்று அவரை பிடிக்க முயன்றபோது, கீழே விழுந்ததில் முகமது அன்சாரிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, முகமது அன்சாரியை போலீஸாா் கைது செய்து, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
முகமது அன்சாரி மீது ஏற்கெனவே வெங்கமேடு காவல்நிலையம், ஈரோடு, கொடுமுடி காவல்நிலையங்களில் 10 குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.