கரூர் துயரம்: ``குறைந்தபட்சம் இதையாவது செய்யுங்கள்'' - விஜயிடம் நடிகர் விஷால் வைத்த கோரிக்கை
இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 12 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களைக் காண தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்.
இந்த சம்பவத்துக்கு இந்திய அரசியல் தலைவர்கள் முதல் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சினிமா பிரபலங்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால், ``முழுக்க முழுக்க முட்டாள்தனம். நடிகர்/அரசியல்வாதி விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கேள்விப்படும்போது மனம் வேதனைப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என் இதயம் அஞ்சலி. மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சியினரிடம் எனது மனமார்ந்த வேண்டுகோள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் அதுதான் கட்சியால் செய்யக்கூடிய குறைந்தபட்ச பரிகாரமாக இருக்கும்.
எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு அரசியல் பேரணிகளிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.