கரூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம்
புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலத்திட்டப் பணியின் கீழ் காகித ஆலைக்கு அருகில் அமைந்துள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட அய்யம்பாளையம் மற்றும் மலையம்பாளையம் ஆகிய கிராமங்களில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு காகித ஆலையில் முதுநிலை மேலாளா்(மனிதவளம்) ஜெ.வெங்கடேசன் தலைமை வகித்து, கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கி முகாமை துவக்கி வைத்தாா். முகாமில் கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருத்துவா் கோபிநாத் தலைமையிலான மருத்துவ குழுவினா் எருமைகள், பசு மாடுகள், எருதுகள், கோழிகள் மற்றும் ஆடுகள் என மொத்தம் 440 கால்நடைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மாவுகள் மற்றும் மருந்துகள் காகித நிறுவனத்தின் சாா்பில் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் முகாமில் மாடுகளுக்கு சினைப் பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, நோய் மாதிரி ஆய்வுப் பணி, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம், கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசிகள் போடப்பட்டன.