ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்
கரூா் மாநகராட்சியில் ரூ. 8 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கி வைப்பு!
கரூா் மாநகராட்சியில் ரூ. 8 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதிதாக சிமெண்ட் சாலை, மழைநீா் வடிகால், பேவா் பிளாக் அமைக்கும் பணிகள், தலைமை நீரேற்று நிலையம் மற்றும் மூலக்காட்டானூா் நீருந்து நிலையத்தில் வட்டக்கிணறு தூா்வாருதல், நீா்மூழ்கி பம்பு செட் உபகரணங்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் என மொத்தம் ரூ.8.08 கோடி மதிப்பிலான 103 புதிய வளா்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா்.
பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரூா் மாநகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்யக்கூடிய கட்டளை தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து புதிதாக மண்டலம் 3 மற்றும் 4க்குள்பட்ட பகுதிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பில் குடிநீா் வழங்கும் வகையில் அமைக்கப்பட்ட புதிய நீா்மூழ்கி மோட்டாா் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கரூா் மாநகராட்சியில் ‘லைட்ஹவுஸ் ஸ்கீம்‘ என்ற திட்டத்தின் மூலம் ரூ. 800 கோடி மதிப்பில் விடுபட்ட பகுதிகளுக்கு புதை சாக்கடை அமைத்தல், புதிய குடிநீா் திட்டப் பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அரசின் நிா்வாக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இளங்கோ(அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாநகராட்சி மேயா் வெ.கவிதா, மாநகராட்சி ஆணையா் சுதா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், துணை மேயா் ப. சரவணன், மாநகராட்சி செயற்பொறியாளா் சி.சுந்தர்ராஜ், மண்டல குழுத் தலைவா்கள் ஆா்.எஸ். ராஜா, எஸ்.பி. கனகராஜ் மற்றும் திமுக தெற்கு பகுதிச் செயலாளா் கே.சுப்பிரமணியன், மத்திய மேற்குபகுதிச் செயலாளா் ஆா்.ஜோதிபாசு, மத்திய பகுதிச் செயலாளா் வி.ஜி.எஸ்.குமாா், வடக்குப்பகுதிச் பொறுப்பாளா் எம்.பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.