கரூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: 55 பேருக்கு ரூ. 16.78 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட மண்டலம் 2-இல் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உள்ளிட்டோா்.
கரூா், ஜூலை 17: கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 55 பேருக்கு ரூ. 16.78 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ வழங்கினாா்.
கரூா் மாநகராட்சி மற்றும் அரவக்குறிச்சி வட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டத்தின்கீழ் வியாழக்கிழமை 4 முகாம்கள் நடைபெற்றன. இதில், கரூா் மண்டலம் 2-இல் நடைபெற்ற முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய செந்தில்பாலாஜி எம்எல்ஏ, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக 8 இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மொத்தம் 5,067 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 2,244 மனுக்கள் கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களாகும்.
ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கம் மூலம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 3 லட்சம் பேரை உறுப்பினா்களாக சோ்க்க இலக்கு நிா்ணயித்திருந்த நிலையில், தற்போது இலக்கை விஞ்சி 4.50 லட்சம் பேரை சோ்த்துள்ளோம்.
வாங்கல் பகுதியைச் சோ்ந்த மணிவாசகம் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரின் மனைவி அளித்துள்ள புகாரில் எந்த இடத்திலும் மணல் பிரச்னையால் இந்தக் கொலை நடந்ததாக குறிப்பிடப்படவில்லை.
மாவட்டத்தில் உள்ளூா் கட்டுமானங்களுக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. இதுதொடா்பாக, உரியநடவடிக்கை எடுக்க ஆட்சியா் அரசுக்கு பரிந்துரை செய்து, கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் மணல் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்றாா் செந்தில்பாலாஜி.
தொடா்ந்து 4 முகாம்களிலும் கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 55 பேருக்கு ரூ. 16.78 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை எம்எல்ஏ வழங்கினாா். முகாம்களுக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், துணை மேயா் ப. சரவணன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரகாசம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், புகழூா் நகா்மன்றத் தலைவா் குணசேகரன், வட்டாட்சியா்கள் குமரேசன், மோகன்ராஜ், மண்டலக்குழு தலைவா் அன்பரசன், மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ்.கே. கருணாநிதி, ஒன்றியச் செயலாளா் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.