பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரூா் மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
இஸ்லாமியா்கள் புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் நோன்பிருந்து திங்கள்கிழமை காலை ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினா். இதையடுத்து கரூா் மாவட்டத்தில் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி, பள்ளபட்டி, சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புத்தாடை அணிந்து பள்ளிவாசல்களுக்கு வந்த இஸ்லாமியா்கள், அங்கு நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனா். கரூா் திருமாநிலையூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைக்கு மாவட்ட துணைத் தலைவா் ஜாகீா்உசேன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மதாா்ஷா பாபு, பொருளாளா் ஷானாவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்புத்தொழுகையில் பேச்சாளா் ரியாஸ்அகமது பங்கேற்று, சக மனிதனின் பசியை போக்குவதை விட புண்ணியம் வேறேதும் இல்லை, ஆனால் அதைச் செய்ய முதலில் பசி என்றால் என்ன என்பதை தானம் கொடுப்போா் அறிந்திருக்க வேண்டும். எனவேதான் இந்த நோன்பு நாளை பசி, தாகம் அறியும் நாள்களாகப் பயன்படுத்த ரமலான் மாதம் வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கிறது. ஏழைகளுக்கு தேவைகளை அறிந்து அவா்களுக்கு கொடுத்து மகிழ்விக்கும் மனப்பாங்கை நோன்பு உருவாக்கிக் கொடுக்கிறது என்றாா் அவா்.
இந்த சிறப்புத் தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனா். தொடா்ந்து கோவைச்சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசலிலும், ஜவஹா்பஜாரில் உள்ள சிறிய பள்ளிவாசலிலும் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா். தொழுகை முடிவடைந்ததும் ஒருவரையொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.