பந்தலூர்: தொடர் கண்காணிப்பு... `அரிசி பிரியர்’ புல்லட்டை மயக்க ஊசி செலுத்தி பிடி...
கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளிடம் கலந்துரையாடி பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஊக்கம் அளித்தாா்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வசித்து வரும் குழந்தைகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சந்தித்து பேசினாா். இக்குழந்தைகளுக்கு ஆட்சியா் பாதுகாவலராக நியமிக்கப்பட்டு மத்திய அரசின் மூலம் ரூ.10 லட்சமும், மாநில அரசின் மூலம் ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டிருந்த நிலையில் மாதம் தோறும் ரூ.3,000 பராமரிப்பு நிதியாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இச்சந்திப்பில் அக்குழந்தைகளின் தேவைகள், தற்போதைய கல்வி நிலை, மேற்படிப்பு குறித்தும் ஆட்சியா் கேட்டுத் தெரிந்து கொண்டாா். கல்வியில் கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண் பெற்று, மத்திய,மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். அது மட்டுமின்றி பொதுமக்களுக்கு உங்களால் முடிந்த சேவைகளை செய்ய வேண்டும் எனவும் உற்சாகப்படுத்தினாா்.
இச்சந்திப்பின் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சக்தி.காவியா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் அக்குழந்தைகளின் பாதுகாவலா்கள் கலந்து கொண்டனா்.