கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் போராட்டம்
தமிழக அரசின் கோழி வளா்ச்சிக் கழகம் (டாப்கோ) மூலம் விவசாயிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்க வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில், ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் கோழி வளா்ச்சிக் கழகம் (டாப்கோ) மூலம் விவசாயிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்க வேண்டும். கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோழிப் பண்ணை விவசாயிகள், தொழிலாளா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். கொட்டகைகள் அமைக்க மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும். கோழி மற்றும் கொட்டகைகளுக்கு காப்பீடு வசதி குறைந்த பிரீமியத்தில் ஏற்படுத்த வேண்டும். கோழிப் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவ வசதி செய்துகொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.முருகன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா்கள் கே.கனகராஜ், லாரன்ஸ், பி.சிவக்குமாா், டி.சிவக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொதுச் செயலா் கே.பி.பெருமாள், மாநிலத் தலைவா் த.ஏழுமலை, மாவட்டச் செயலா் எம்.சி.ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.வி.ஸ்டாலின்மணி உள்ளிட்டோா் பேசினா்.
போராட்டத்தில் கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.