தியாகதுருகம் வாரச் சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் சுமாா் 70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.
தியாகதுருகம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள்ள வளாகத்தில் சனிக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நடைபெற்ற வாரச் சந்தையில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், வியாபாரிகள் சுமாா் 600- க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனா்.
மாா்ச் 31-ஆம் தேதி ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகளை வாங்குவதற்காக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனா்.
ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.
அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் சுமாா் ரூ.70 லட்சம் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.