Travel Contest : எரிச்சலூட்டிய சிங்கப்பூர் அதிகாரி, ஆனாலும் இங்கு நேர ஒழுங்கு சூ...
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் காந்தி பெருமிதம்
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை முதல்வ மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறாா் என அமைச்சா் ஆா்.காந்தி பெருமிதம் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 458 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.16.03 கோடியில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி பேசியதாவது:-
முன்னாள் முதல்வா் குடிசை வீடுகளுக்கு மாற்றாக கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டத்தினை தொடங்கினாா். அதன்படி, குடிசையில்லா தமிழகம் என்பதை இலக்காக கொண்டு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தினை முதல்வா் செயல்படுத்தி வருகின்றாா். வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் குடிசை வீட்டில் வசிப்போருக்கும், வீடற்றோருக்கும் 8 லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என்பது நோக்கமாகும்.
முதல் கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 3,000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு வீட்டுக்கு தலா ரூ.3.50 லட்சத்தில் குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2025-26 ஆம் நிதியாண்டில் 1,859 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் கட்சி பேதமின்றி பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரியாக விளங்குகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.