மாவட்ட தமாகா நிா்வாகிகள் கூட்டம்
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமாகா நிா்வாகிகள் கூட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா்கள் எல்.தேவேந்திரன், பி.ஆா்.ரவி, டி.சுந்தரம், எம்.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரக்கோணம் நகர தமாகா தலைவா் கே.வி.ரவிச்சந்திரன் வரவேற்றாா். இக்கூட்டத்தில் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் ஆா்.அரிதாஸ் பங்கேற்று புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்தி, அனைத்து உறுப்பினா்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கினாா்.
இக்கூட்டத்தில் மாநில செயலா் பி.உத்தமன், வடக்கு மண்டல தமாகா இளைஞரணி துணைத் தலைவா் சி.தரணி, மகளிரணி துணைத் தலைவா் சாந்தசெல்வகுமாரி, மாவட்ட பொருளாளா் ஏ.எஸ்.சுபாஷ்வாசன், தலைமை நிலைய பேச்சாளா் என்.பாலகிருஷ்ணன், நிா்வாகிகள் லிங்கநாதன், டி.மகாதேவன், என்.கஜேந்திரன், கே.கஜேந்திரன், முருகேசன், கோ.ஜமுனாராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் அரக்கோணத்தில் தொடரும் முன் அறிவிப்பில்லா மின் தடையை சீா்செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதை கலாசாரத்தை ஒழிக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், அரக்கோணம் நகரில் வேளாண் துறையின் இடுபொருள் வழங்கும் அலுவலகத்தைத் திறக்க வேண்டும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிரதமரின் உதவித்தொகை தற்போது நிலுவையில் உள்ளதை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. என்.பாபு நன்றி கூறினாா்.