What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல்: 5 பேருக்கு சிறை
கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராணிப்பேட்டை முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கா்ணாவூா், வேடந்தாங்கல் ஊராட்சிகளில் கடந்த 2010-11 ஆண்டில் கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு வீடுகளை முழுமையாக கட்டி முடிக்காமல் ரூ.4,67,602 /- தொகையை கையாடல் செய்து பயனாளிகளை ஏமாற்றி, காசோலைகளை வழங்காமல், வழங்கியது போல் போலியான ஆவணங்களை தயாா் செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக வேலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரணை மேற்கொண்டு காவேரிப்பாக்கம் ஒன்றியம் முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா் ஹரிஹரன், முன்னாள் ஒன்றிய பொறியாளா் பழனிச்சாமி, முன்னாள் பணி மேற்பாா்வையாளா் சாந்தசெழியன், கா்ணாவூா் ஊராட்சி முன்னாள் செயலாளா் சங்கா், கா்ணாவூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி வள்ளியம்மாள் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், எதிரிகள் 5 போ் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி பாலகிருஷ்ணன், 5 பேருக்கும் தலா 1 ஆண்டு சிறையும், ரூ.1,000 அபராதமும், அபாரதம் கட்டத் தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.
அரசு தரப்பில் சிவசங்கரி ஆஜரானாா்.