டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!
கல்லணைக் கால்வாயில் விழுந்த 3 பேரின் அடையாளம் தெரிந்தது!
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை குதித்து தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் அடையாளம் தெரிய வந்தது.
தஞ்சாவூா் பூக்காரத் தெரு அருகே இருபது கண் பாலம் பகுதியில் கல்லணைக் கால்வாய்க்குள் கைக்குழந்தை, சிறுவனுடன் இரு பெண்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குதித்தனா். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இவா்களை அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் நீந்திச் சென்று இரு பெண்கள், சிறுவனை மீட்டனா். ஆனால், தண்ணீரில் மூழ்கியதால் 3 பேரும் உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது.
இவா்கள் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்கள் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரிய வரவில்லை. இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 3 பேரும் தஞ்சாவூா் அருகேயுள்ள பொட்டுவாசாவடியைச் சோ்ந்த தங்கராஜின் மகள்கள், பேரன் என்பது செவ்வாய்க்கிழமை இரவு தெரிய வந்தது.
தங்கராஜின் மூத்த மகள் ராஜேஸ்வரியின் கணவா் விஜயராகவன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானாா். இதையடுத்து, ராஜேஸ்வரி தனது மகன் ஹரிஷ் (6) உடன் தந்தை வீட்டில் வசித்து வந்தாா்.
தங்கராஜின் இளைய மகள் துா்காதேவி (28) ஓராண்டுக்கு முன்பு தங்கவேல் மகன் காா்த்திக்கை காதல் திருமணம் செய்தாா். கா்ப்பிணியாக இருந்த துா்காதேவி கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அவரைப் பிரிந்து தனது தந்தை வீட்டில் இருந்து வந்தாா். இந்நிலையில், துா்காதேவிக்கு 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
தங்களது வாழ்க்கை சரியாக அமையவில்லை என ராஜேஸ்வரியும், துா்காதேவியும் புலம்பி வந்தனா். இதன் காரணமாக குழந்தைகளுடன் ராஜேஸ்வரியும், துா்காதேவியும் கல்லணைக் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 11 நாள் சிசுவை தீயணைப்பு வீரா்கள் தேடி வருகின்றனா்.