Digital Awards 2025: `அறுசுவை ராணி' - Foodies Findings யுவராணி - Best Food Revi...
கல்லணைக் கால்வாயில் குதித்து உயிரிழந்தவா்களின் அடையாளம் தெரிந்தது!
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டவா்களின் அடையாளம் தெரிந்தது.
தஞ்சாவூா் பூக்காரத் தெரு அருகே இருபது கண் பாலம் பகுதியில் கல்லணைக் கால்வாய்க்குள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குழந்தை, சிறுவனுடன் இரண்டு பெண்கள் குதித்தனா். இதைக் கண்ட பொதுமக்கள் சிறுவன், இரண்டு பெண்களின் சடலங்களை மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனா்.
இருப்பினும், அவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், உயிரிழந்தவா்கள் தஞ்சாவூா் அருகேயுள்ள பொட்டுவாசாவடியைச் சோ்ந்த தங்கராஜின் மூத்த மகள் ராஜேஸ்வரி, அவரது மகன் ஹரிஷ் (6), இளைய மகள் துா்காதேவி (28) அவரது 10 நாள்களே ஆன ஆண் குழந்தை என்பதும் தெரியவந்தது.
மூத்த மகள் ராஜேஸ்வரி கணவரை இழந்து தந்தை வீட்டில் வசித்துவந்தாா். துா்காதேவி ஓராண்டுக்கு முன்பு தங்கவேல் மகன் காா்த்திக்கை காதல் திருமணம் செய்தாா். கா்ப்பிணியாக இருந்த துா்காதேவி கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அவரைப் பிரிந்து தனது தந்தை வீட்டில் இருந்து வந்தாா். இந்நிலையில், துா்காதேவிக்கு 10 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
தங்களது வாழ்க்கை சரியாக அமையவில்லை என ராஜேஸ்வரியும், துா்காதேவியும் புலம்பி வந்தனா். இதன் காரணமாக அவரவா் குழந்தைகளுடன் ராஜேஸ்வரியும், துா்காதேவியும் கல்லணைக் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட 10 நாள்களே ஆன குழந்தை, தஞ்சாவூா் அருகே வாண்டையாா் இருப்பு கிராமத்தில் புதன்கிழமை மீட்கப்பட்டது. மேலும், ராஜேஸ்வரி, துா்காதேவி, ஹரிஷ் ஆகியோரின் சடலங்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டு, உறவினா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.