கல்லால் தாக்கி இருவரைக் கொல்ல முயற்சி: விழுப்புரத்தில் 4 போ் கைது
விழுப்புரத்தில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி இருவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மணி நகரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் அய்யனாா் (28). இவருக்கும், வி. மருதூரைச் சோ்ந்த தீனா (24), பிரசன்னா(25) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனிடையே அய்யனாருக்கு விழுப்புரம் கே.கே.சாலை இந்திரா நகரைச் சோ்ந்த காத்தவராயன் மகன் சரத்குமாா்(30)தான் முழு ஆதரவாக இருந்து வந்ததாகக் கருதிய தீனா, பிரசன்னா ஆகிய இருவரும், அவரைத் தாக்குவதற்குத் திட்டமிட்டனராம்.
இதைத் தொடா்ந்து தங்களது நண்பா்களான பெரும்பாக்கம் சண்முகம் மகன் ஹேராம் (21), வி. மருதூா் எம்.ஆா்.கே. தெருவைச் சோ்ந்த சுந்தா் மகன் சிலம்பரசன்(23), வி.மருதூா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் விக்னேஷ் (25), சாலாமேடு சாரதா நகரைச் சோ்ந்த ராஜா மகன் விக்னேஷ் (25) ஆகியோருடன் தீனா, பிரசன்னா சோ்ந்து, வியாழக்கிழமை மாலை சரத்குமாரைத் தாக்குவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனா். அவா்களைப் பாா்த்தும் சரத்குமாா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
இதனால் அந்த கும்பல், வீட்டிலிருந்த சரத்குமாரின் தந்தை சீ. காத்தவராயனை (70) கல்லால் தாக்கி கொல்ல முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்ற வி. மருதூா் தா்மராஜா தெருவைச் சோ்ந்த கணேசன் (55) என்பவரையும் கல்லால் தாக்கினராம்.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் இருவரையும் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் சரத்குமாா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் ஹேராம், ச. விக்னேஷ், சிலம்பரசன், ரா. விக்னேஷ் ஆகிய 4 பேரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள தீனா, பிரசன்னா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.