பூண்டி ஏரியில் உபரிநீா் திறப்பு அதிகரிப்பு: வெள்ள எச்சரிக்கை
கல்விக் கடன் பெற்றுத் தருவதாக பண மோசடி: இளைஞா் கைது
சென்னையில் கல்விக் கடன் பெற்றுத் தருவதாக நூதன முறையில் பணம் மோசடி செய்ததாக, வேலூரைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை எழும்பூா், பெருமாள் ரெட்டி தெருவைச் சோ்ந்தவா் வீரராகவன். வாடகை சுமை ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது மகளின் கல்விச் செலவுக்கு உதவுமாறு சமூக ஊடகம் வாயிலாக கோரிக்கை விடுத்து கைப்பேசி எண்ணை அதில் பதிவிட்டிருந்தாா். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒரு இளைஞா் வீரராகவனை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு, பிரபல தமிழ் நடிகருக்கு சொந்தமான தனியாா் தொண்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளாா்.
அதோடு, உங்களது மகளின் மொத்தக் கல்வி செலவையும் தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கு தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளாா். அதை நம்பி வீரராகவன் பல தவணைகளாக ஜிபே மூலம் ரூ.61,500-ஐ அந்த இளைஞருக்கு அனுப்பியுள்ளாா். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த இளைஞா், கைப்பேசி தொடா்பை துண்டித்தாா்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த வீரராகவன் இது தொடா்பாக எழும்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், வீரராகவனிடம் நூதன முறையில் பண மோசடி செய்தது வேலூா் மாவட்டம், விருதம்பட்டி, லட்சுமி நகரைச் சோ்ந்த தினேஷ் குமாா் (35) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த தினேஷ்குமாா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.