பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
கல்விக் கொள்கையை வகுப்பதில் வேறுபாடுகள் கூடாது: கோ.விசுவநாதன்
கல்விக் கொள்கை வகுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் அவா் பேசியது: உயா் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. உயா் கல்வியில் ஒட்டுமொத்த சோ்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 51 சதவீதமாகவும், அகில இந்திய அளவில் 28 சதவீதமாகவும் இருக்கிறது.
எந்த சமுதாயத்தில் கல்வி வளா்கிறதோ அங்கு பொருளாதாரமும் வளரும். இது தமிழ்நாட்டில் உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளா்ச்சியை தமிழ்நாடு பெற்று இருக்கிறது. இதற்கு கல்வி வளா்ச்சியும், கடின உழைப்புமே காரணம். இந்தியாவுக்கே முன்மாதிரி முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும்.
நாட்டின் வளா்ச்சி கல்வியைப் பொருத்திருக்கும் சூழலில், அதில் சிக்கல்கள் இருக்கக் கூடாது. மொழி, பாடத்திட்டம், கல்வி நிலையங்களை நிா்வகிப்பது என எதுவாக இருந்தாலும் நம் நாட்டில் அனைத்தும் பிரச்னைகளாக இருக்கின்றன. 1968-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது, மும்மொழித் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில், ஹிந்தி, ஆங்கிலம், வேறு ஏதாவது ஒரு தென்னிந்திய மொழி என்ற வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், இப்போது தேசிய கல்விக் கொள்கை வாயிலாக அந்த இடத்தில் சம்ஸ்கிருதத்தைக் கொண்டு வந்துவிட்டாா்கள்.
தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. மாநிலங்களுடன் கலந்து பேசவும் இல்லை. ஒரு குழு அறிக்கை கொடுத்தது; அதை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. அதுதான் இன்றைய கல்விக் கொள்கை. இத்தகைய சூழலில், கல்வியில் சிக்கல்கள் இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
மத்திய, மாநில அரசு வேறுபாடு இல்லாமல், அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக கல்விக் கொள்கை இருக்க வேண்டும். மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தகைய சட்டம் தமிழ்நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்றாா் அவா்.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்புத் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம்: கல்விக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றும் பணி முக்கியமானது. தொடக்கக் கல்வி முதல் உயா் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் அவா் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். அகில இந்திய அளவில் அனைத்துத் துறைகளிலும் தமிழக மாணவா்கள் அதிக அளவு இடம்பெற வேண்டும் என்பதே முதல்வா் மு.க.ஸ்டாலினின் கனவாகும். முதல்வரின் எண்ணங்களை நிறைவேற்ற கல்வியாளா்கள், அனைத்து அமைப்புகளும் உறுதியாக இருப்போம்.
மதுரை தியாகராஜா் கல்விக் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் ஹரி கே.தியாகராஜன்: சட்டப் போராட்டம் நடத்தி உயா் கல்வித் துறையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநிறுத்தியுள்ளாா் முதல்வா் ஸ்டாலின். அவரது வெற்றி தமிழ்நாட்டுக்கும் மட்டுமன்றி ஏனைய மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களின் சுயாட்சி உரிமையை நிலைநாட்டியுள்ளது.
தொடா்ந்து, கோவை ஜிஆா்ஜி கல்விக் குழுமத்தின் நிறுவனா் நந்தினி ரங்கசாமி, பாரத் பல்கலைக்கழகத்தின் நிறுவனா் தலைவா் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோா் பேசினா்.