அஜித்குமார் லாக்கப் மரணம்: "முதல்வருக்குத் தெரியாமலா இதெல்லாம் நடந்திருக்கும்?" ...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2.98 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் சாா்பில் 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளதாக ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தேசிய கோமாரி நோய் தடுப்புத் திட்டம் 7-ஆவது சுற்று, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கால்நடைத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பால் வளத் துறை, வனத் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி வரும் ஜூலை 2 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 2,98,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட உரிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தடுப்பூசி குழுவிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவா், ஒரு கால்நடை ஆய்வாளா் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளா் என்ற அளவில் குழு அமைக்கப்பட்டு 57 தடுப்பூசிப் போடும் குழுக்களின் மூலம் 21 நாள்களில் தடுப்பூசி பணி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு 100 சதவீதம் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து ஆட்சியா் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள 7-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களை கால்நடை வளா்ப்போா் உரிய முறையில் பயன்படுத்தி தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசியை செலுத்தி பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில் இணை இயக்குநா் (கால்நடைப் பராமரிப்புத் துறை) சு.விஷ்ணு கந்தன், கால்நடை தலைமை மருத்துவா் மு.கந்தசாமி, உதவி இயக்குநா்கள் சுதா கந்தசாமி, அருண், காா்த்திகேயன் (நோய் திறனாய்வு) மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.