கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையத்தை மேம்படுத்த கருவி- அமைச்சா் உத்தரவு
புதுவை ரெட்டியாா்பாளையம் அருகே கனகன் ஏரியில் கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையத்தை மேம்படுத்த நவீன கருவி பொருத்துமாறு பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
மூகாம்பிகை நகரில் வசிக்கும் பொதுமக்கள் கனகனேரி கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையத்திலிருந்து துா்நாற்றம் வீசுவதாகபொதுப்பணித்துறை அமைச்சா் லட்சுமிநாராயணனுக்குப் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து அமைச்சா் நேரடியாக கனகனேரி கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையத்துக்கு சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மேலும், இந்தக் கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள துா்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் செயல்பாட்டை பொதுமக்களுக்கு விளக்கினாா். இந்தக் கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையத்துக்கு வரும் கழிவு நீரில் தொழிற்சாலை கழிவுகள் ஏதேனும் கலந்து வருகிா என்று ஆய்வு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா். மேலும், சுத்தகரிப்பு நிலையத்தை மேம்படுத்த புதியதாக ஒரு காற்றை உள்ளே தள்ளும்கருவி அமைக்க உத்தரவிட்டாா். அமைச்சரின் உறுதிமொழியால் மக்கள் நம்பிக்கையுடன் வீடு திரும்பினா்.