கிய்ராசி ஹாட்ரிக் கோல் வீண்: அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா!
கழுத்தை கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை; போராடி மீண்டு வந்து குட்டிகளுக்கு பாலூட்டிய நாய்..!
மும்பை புறநகர் பகுதியான கோரேகாவ் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் மும்பை திரைப்பட நகரம் இருக்கிறது. அதோடு பொதுமக்களும் வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி இருக்கின்றனர்.
எனவே, `குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்து விட்டது, மனிதர்களை தாக்கி விட்டது' என்று இந்த வனப்பகுதியில் பிரச்னைகள் வருவதுண்டு.

சிறுத்தைகளுக்கு காட்டுக்குள் இரை கிடைக்காத சமயத்தில், மனிதர்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குள் வந்து தெருநாய்கள், ஆடு, மாடுகளை பிடித்து செல்வது வழக்கம்.
அது போன்று சிறுத்தையின் பிடியில் சிக்கிய நாய் ஒன்று அதன் பிடியில் இருந்து தப்பித்து வந்துள்ளது. கோரேகாவ் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் இக்காட்சி பதிவாகி இருந்தது.
இரவில் சிறுத்தை ஒன்று மனிதர்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் புகுந்து குட்டி போட்டிருந்த நாய் ஒன்றின் கழுத்தை பிடித்து காட்டுக்குள் தூக்கிச்சென்றது. ஆனால் அந்த நாய் சிறுத்தையுடன் போராடி அதனிடமிருந்து தப்பித்து கழுத்தில் காயத்துடன் தனது குட்டிகள் இருக்கும் இடத்திற்கு வந்தது. அதோடு காயத்தோடு தனது குட்டிகளுக்கு பால் கொடுத்தது.

இக்காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. காயத்துடன் குட்டிகளுக்கு நாய் பால் கொடுப்பதை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் யாமினி அந்த நாயை தூக்கிச்சென்று அதற்கு சிகிச்சையளித்தார்.
நாயால் சரியாக சாப்பிட முடியவில்லை. சிறுத்தை கழுத்தை பிடித்ததில் உணவுக்குழாய் உடைந்திருந்தது. இதையடுத்து அந்தேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஆப்ரேசன் செய்யப்பட்டது. நாயின் குட்டிகளை அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்து வளர்த்து வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
