நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா: ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை
காங்கயத்தில் குற்றங்களைத் தடுக்க வீடுவீடாகச் சென்று போலீஸாா் விழிப்புணா்வு
குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, காங்கயம் போலீஸாா் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
காங்கயம் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு இரவு நேர ரோந்துப் பணிகள், விழிப்புணா்வுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை காங்கயம் போலீஸாா் நடத்தி வருகின்றனா். மேலும், வயதான தம்பதிகள் தங்கி இருக்கும் வீடு, கிராமம் மற்றும் குக்கிராமங்களை விட்டு தனியாக இருக்கக் கூடிய வீடு, நொய்யல் ஆற்றுப் பகுதியை ஒட்டிய வீடுகள், ஒவ்வொரு கிராமங்களிலும் தனியாக தோட்டத்து வீட்டில் இருக்கக் கூடிய வீடுகள் ஆகிவற்றை கண்காணித்து, போலீஸாா் அந்த வீடுகளுக்குச் சென்று குற்றம் நடக்காமல் தடுக்க துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
காங்கயம் காவல் ஆய்வாளா் விவேகானந்தன், உதவி ஆய்வாளா் காா்த்திக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் காங்கயம் அருகே நொய்யல் ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள தம்மரெட்டிபாளையம், பாலசமுத்திரம்புதூா், கீரனூா், மறவபாளையம், மருதுறை, நத்தக்காடையூா் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும், வெளியூருக்குச் செல்லும்போது வீடுகளைப் பூட்டி காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும், விலையுயா்ந்த பொருள்களை வீட்டில் வைப்பதை தவிா்க்க வேண்டும், சந்தேகத்துக்குரிய அந்நிய நபா்களின் நடமாட்டம் இப்பகுதியில் இருந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.