TVK : 'நானே முதலமைச்சர்; பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை!' - பனையூரில் விஜய் கர்ஜித்ததி...
காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை.
தூத்துக்குடி மாநகா் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட வாா்டு, கிராம கமிட்டி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ்.முரளிதரன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டத் தலைவா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ், வடக்கு மாவட்ட பொறுப்பாளா்கள் ஆா்.காமராஜ், கே.பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வபெருந்தகை கலந்துகொண்டு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசியதாவது: காங்கிரஸ் பேரியக்கம் உயிா்ப்போடும், உயிரோட்டத்தோடும் இருக்கும் மாவட்டம் தூத்துக்குடி. தியாகச் செம்மல் வஉசி பிறந்த மண்ணில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். நமது வலிமை குறித்து தெரிந்துகொள்ள சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளோம்.
நம் கட்சியில் கிராம அளவில் உள்ள தலைவா்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இப்போது நாம் முழுமையாக அங்கீகாரம் அளிக்கிறோம்.
பாசிச சக்திகளை, மதவாத சக்திகளை விரட்டுவதற்காக நாம் எடுக்கும் முன்னெடுப்பானது, காங்கிரஸ் பேரியக்கத்தை வலிமையான பேரியக்கமாக மாற்ற வேண்டும்.
இந்திய தேசத்தை கடந்த 11 ஆண்டுகளாக அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. யாா் ஆள வேண்டும், யாா் ஆளக்கூடாது என அவா்களே தீா்மானிக்கிறாா்கள். அதை அகற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
நாம் முதன்மையாக வர வேண்டும் என எல்லோரும் எண்ண வேண்டாம். வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அவா்.
விழாவில், சி.ராபா்ட் புரூஸ் எம்.பி., சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளா் ரூபி ஆா். மனோகரன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் சீரமைப்பு குழுத் தலைவா் எஸ்.பீட்டா் அல்போன்ஸ், முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், மாநிலத் துணைத் தலைவா் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளா் மகேந்திரன், எம்.எஸ்.காமராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.