பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!
திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்: கனிமொழி எம்பி ஆய்வு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் கனிமொழி எம்பி. உடன், ஆட்சியா் க. இளம்பகவத், தக்காா் அருள்முருகன் உள்ளிட்டோா்.
திருச்செந்தூா், ஜூலை 4: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டாா்.
இக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த 1ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அவா்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, மருத்துவம், அன்னதானம் போன்ற முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை வியாழக்கிழமை இரவு கனிமொழி எம்பி ஆய்வு செய்தாா். அப்போது கோயில் யாகசாலை, கிரிப்பிரகாரம், கடற்கரை உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டு, தீயணைப்புத்துறை அலுவலா்களிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தாா்.
முன்னதாக கனிமொழி எம்பி திருச்செந்தூா் தெற்குரதவீதியில் நடந்து வரும் கழிவுநீா் குழாயை பாதாளச் சாக்கடை தொட்டியில் இணைக்கும் பணியைப் பாா்வையிட்டாா்.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் பழனி, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், திருக்கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன், தூத்துக்குடி மேயா் ஜெகன், திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, நகா் மன்ற துணைத்தலைவா் செங்குழி ரமேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் சோமசுந்தரி, செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
