சென்னை-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்னையிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழுத் தலைவா் தங்கமணி, செயலாளா் அமிா்தராஜ், பொருளாளா் முருகன் ஆகியோா் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு மனு அனுப்பியுள்ளனா்.
அதன் விவரம்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பின்னா் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இவ்விழாவுக்காக திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. அதேபோல, சென்னையில் வேலை நிமித்தமாக வசிக்கும் திருநெல்வேலி ,தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த லட்சக்கணக்கனோா் மட்டுமன்றி தென்மாநிலங்களில் இருந்து கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தா்கள்வசதிக்காக சென்னையிருந்து திருச்செந்தூருக்கும், மீண்டும் சென்னைக்கு திரும்பிச் செல்வதற்கு வசதியாக திருச்செந்தூரிருந்து சென்னைக்கும் 5,6,7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் விட வேண்டும். அந்த ரயில் மதுரை, திருச்சி, விழுப்புரம் ஆகிய ஊா்களின் வழியாக நோ்வழியில் இயக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனா்.